Tuesday, September 1, 2026 2:43 am
வி.இ. குகநாதன்
காதலுக்காகவும், போர் தொடர்பாகவும் தூது சென்ற பல வரலாறுகளை நாம் சங்க இலக்கியப் பாடல்களில் காணலாம் . அதே போன்று, அதற்குப் பின்னரான காலத்தில் மதத் தூதுவர்கள் பலரை உலகு கண்டது. இன்றும் அரச நுட்பம் (Diplomacy) சார்ந்த பல தூதுகளை நாம் காண்கின்றோம். இவ்வாறான பல்வேறு வகையான தூதுகளைக் காணும் போதும், மொழிக்காகத் தூது செல்பவர்களைக் காண்பது அரிது. அவ்வாறு எமது மொழியான தமிழுக்காகத் தூது சென்ற ஒருவரைப் பற்றியே இக் கட்டுரையில் பார்க்கப்போகின்றோம்.

நாம் பார்க்கப்போகும் வரலாற்று நாயகன் 1913 ஆம் ஆண்டின் ஆகத்து மாதம் இரண்டாம் திகதியன்று, யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள தீவுப் பகுதியிலுள்ள கரம்பன் எனும் ஊரில் பிறக்கின்றார். பிறந்ததும் அவருக்கு வைக்கப்பட்ட பெயர் சேவியர் நிக்கலசு சுரனிசுலாசு என்பதாகும். கிறித்தவ மதக் கல்வி கற்பிக்கப்பட்டு, அவரினை ஒரு மதகுருவாக்க அவரது சுற்றத்தார் முயன்றனர். அவர் வளர்ந்து மதகுருவானபோதும் கூட, அவரது அக்கறை எல்லாம் கல்வி கற்பித்தலிலேயே இருக்கின்றது. குறிப்பாக அவர் தனது தாய்மொழியான தமிழ் மீது தீராக் காதல் கொள்கின்றார். தமிழைக் காதலிக்கும் தமிழர் ஒருவரின் பெயர் தமிழில் இல்லையெனில், அக் காதலின் பொருள் என்ன? எனவே முதலில் தனது பெயரினைத் தமிழ்ப் பெயராக `தனிநாயகம்` என மாற்றிக் கொள்கின்றார்; ஓம், நாம் இக் கட்டுரையில் பார்க்கப்போகும் வரலாற்று நாயகன் தனிநாயகம் அடிகளார் தான். இவ்விடத்தில் ஒன்றினை மட்டும் குறித்து வைத்துக்கொள்ளுங்கள், கிறித்தவர்கள் தமிழ்ப்பெயர் வைத்துக்கொள்ள எத்தடையுமில்லை என்பதற்கான சான்றாக, கிறித்தவ மதகுருவான தனிநாயகம் அடிகளாரைச் சொல்லலாம் .
தனிநாயகம் அடிகள் பல மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர், இவர் தனது தாய்மொழியுடன் ஆங்கிலம் , எசுப்பானியம், உரோம மொழி, போர்த்துகீசியம், பிரெஞ்சு முதலிய மொழிகளில் சரளமாக உரையாடவும் சொற்பொழிவாற்றவும் கூடியவர். தனது பன்மொழி அறிவினையும், மதகுரு என்ற பதவியினையும் துணையாகக் கொண்டு, தமிழினை உலகு எங்கும் எடுத்துச் செல்ல தனிநாயகம் அடிகள் முயன்றார். தமிழுக்காக அவர் தூது சென்ற நாடுகளாக அமெரிக்கா, இங்கிலாந்து, சோவியத் ஒன்றியம் (உருசியா), பிரான்சு, யேர்மனி, யப்பான், தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், பர்மா (மியன்மார்), இத்தாலி, வத்திக்கான் என்பவற்றுடன் இன்னமும் சில ஆபிரிக்க நாடுகளும் அடங்கும். சென்ற இடங்களில் எல்லாம் பேருரைகளையும் தமிழ்ப் பாடங்களையும் நடாத்தியிருந்தார். ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்ற போது அங்குள்ள நூலகங்களில் பல தமிழ்க் கையெழுத்து நூல்கள், மற்றும் அச்சிடப்பெற்ற தமிழ் நூல்கள், ஓலைச்சுவடிகள் என்பவற்றினை ஆய்ந்து ஆவணப்படுத்தினார். தென்கிழக்காசிய நாடுகளில் காணப்பட்ட தமிழ்ப் பண்பாட்டு வேர்களைப் பற்றியும் ஆய்ந்து உலகுக்கு வெளிப்படுத்தினார். அவர் தாய்லாந்து நாட்டுக்கு ஒரு முறை சென்ற போது, தாய்லாந்து நாட்டு மன்னரின் முடிசூட்டு விழா நடைபெறுகின்றது, அப்போது முடிசூட்டு விழாவில் திருவாசப்பாடல் பாடப்படுவதனைக் கண்டறிந்து உலகுக்கு அம்பலப்படுத்துகின்றார். அவர் ஒரு கிறித்தவ மதகுருவாக இருந்த போதும், மாணிக்கவாசகரின் திருவாசகப்பாடலினை இனங்கண்டு உலகுக்கு அறிவித்தமையினை நோக்குக.
மேற்கு இந்திய தீவுகளுக்கு சென்றிருந்த போது, அங்கு சில நூற்றாண்டுகளுக்கு முன் கூலிகளாகக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் காலப்போக்கில் தமிழை மறந்திருந்த தமிழரின் பெயர்களைக் கொண்டும், மாரியம்மன் வழிபாடு போன்ற சடங்குகளைக் கொண்டும் , குறித்த மக்களின் முன்னோர் தமிழர்கள் என்பதனை உலகுக்கு அறிவித்தார்.
அச்சுப்பொறி கண்டுபிடிக்கப்பட்ட பின்பு ஐரோப்பிய மொழிகளிலேயே அச்சுப் பொத்தகங்கள் வெளிவந்தன. தெற்காசியாவினைச் சேர்ந்த மொழிகளில் முதன் முதலில் எந்த மொழியில் அச்சு வடிவிலான பொத்தகம் வந்தது தெரியுமா? எமது மொழியான தமிழ்மொழியிலேயே முதலாவது பொத்தகம் தெற்காசிய மொழிகளில் வெளிவந்திருந்தது; அப்பொத்தகத்தின் பெயர் `தம்பிரான் வணக்கம்`(Thambiran Vanakkam) என்பதாகும், 1578 இல் அச்சிடப்பெற்ற தம்பிரான் வணக்கம் எனும் நூலினை ஐரோப்பாவில் கண்டெடுத்து, உலகுக்கு அம்பலப்படுத்தினார். 16 ஆம் நூற்றாண்டில் அச்சிடப்பட்ட Luso-Tamil Catechism (போர்த்துக்கீச-தமிழ் மொழியில் கிறித்தவம் சார்ந்த கேள்விக் கொத்து) , கிறித்தியானி வணக்கம்” (Kiristiani Vanakkam) போன்ற நூல்களையும் கண்டெடுத்து உலகுக்கு வெளிப்படுத்தினார். போர்த்துக்கலில் அவர் கண்டெடுத்த Arte da Lingua Malabar என்ற கையேடே தமிழுக்காக அயலவர் எழுதிய முதல் இலக்கணக் கையேடு ஆகும், இதனை வெளிக்கொண்டு வந்தவரும் அடிகளாரே!
யப்பானுக்கு அடிகளார் சென்றபோது, தமிழ்மொழிக்கும் யப்பானிய மொழிக்குமிடையே காணப்பட்ட தொடர்புகளை அறிந்து அம்பலப்படுத்தினார். அடிகளார் இட்ட அடித்தளத்திலேயே பின்னரான காலப்பகுதியில் பேரா.சுசுமு ஓனோ ( (Susumu Ohno ) போன்ற யப்பானிய அறிஞர்களும் பேராசிரியர்களான இணையர் சண்முகதாசு- மனோன்மணி போன்ற தமிழ் அறிஞர்களும், தமிழ்-யப்பானிய மொழித் தொடர்புகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டனர்.


தமிழின் மேன்மையினை உலகுக்கு உணர்த்தும் நோக்குடன் உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தினை 1964 இல் நிறுவி, அதன் முதலாவது கூட்டத்தினை இந்தியத் தலைநகர் தில்லியில் நடாத்தினார். அடுத்ததாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் நிறுவப்படுகின்றது; அதன் தலைவராக பிரான்சினைச் சேர்ந்த யீன் ஃபிலியோசா (Jean Filliozat ) என்ற அறிஞரும், துணைத் தலைவர்களாக இங்கிலாந்தின் ஒக்சுபோட் பல்கலைக்கழக பேராசிரியர் தாமசு பரோ, அமெரிக்க நாட்டு பேராசிரியர் எமினோ, பன்மொழிப் புலவர் பேராசிரியர் தெ. பொ. மீனாட்சிசுந்தரம், மு. வரதராசன் ஆகியோரும், இணைச் செயலாளர்களாக செக்கோசெவவாக்கியாவினைச் சேர்ந்த பேராசிரியர் கமில் சுவெலபில் என்பவரும் தனிநாயகம் அடிகளாரும் பணியாற்றுகின்றனர். அதன் வழி உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் நடைபெறுகின்றன. அடிகளாரின் காலத்தில் நான்கு மாநாடுகள் நடைபெறுகின்றன. முதலாவது மாநாடு மலேசியாவில் 1966 இல் இடம்பெற்ற போது, அடிகளார் பொதுச்செயலாளராக இருந்து, திறம்பட நடாத்தி முடித்தார். இரண்டாவது மாநாடு 1968 இல் சென்னையில் நடைபெற்ற போது, அதன் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார். மூன்றாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1970 ஆம் ஆண்டு பிரான்சு நாட்டின் தலைநகர் பாரிசில் இடம்பெற்றது. நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்தில் யாழ் நகரே விழாக்கோலம் கொள்ளும் வகையில் 1974ஆம் ஆண்டு நடைபெற்றது. அந்த விழாவின் இறுதிநாளில் சிங்களப்பேரினவாதிகளும் இலங்கைக் காவல்துறையும் சேர்ந்து படுகொலைகளை நடாத்திக் குழப்பி அடித்தனர். இந்த வன்முறை ஏற்படுத்திய மனத்தாக்கம் அடிகளாரின் மனதினைப் பெரிதும் பாதித்திருந்தது. பின்னர் நோய்வாய்ப்பட்ட அடிகளார் 1980 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதலாம் திகதி காலமாகினார்.
தனிநாயகம் அடிகளார் ஆற்றிய தமிழ்த்தொண்டுகளின் பட்டியல் நீளமானது, அவை எல்லாவற்றினையும் ஒரு கட்டுரையில் அடக்கமுடியாது. அடிகளாரின் தமிழ்த்தூது பற்றி மட்டுமே இக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அடிகளாரின் இறை நம்பிக்கை வேறாக இருந்தாலும், தமிழ் ஆர்வலர்களான எமக்கு அடிகளாரே ஒரு தெய்வம்தான், வள்ளுவனின் பின்வரும் குறளுக்கேற்ப அடிகளார் எமக்கான தெய்வமே!
` வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்`.
: குறள் 50.
இன்று (செப்டம்பர் 1 ) அடிகளாரின் நினைவுநாள், தமிழ் உள்ளவரை அடிகளார் நினைவுகூரப்படுவார். நாமும் இன்றைய அடிகளாரின் நினைவுநாளில் எம்மாலான தமிழ்த்தொண்டுகளை ஆற்றுவோம் என உளமார உறுதியேற்போம்.

