Monday, August 31, 2026 12:53 pm
சவூதி அரேபியா, துருக்கி , பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையே சமீபத்தில் கையெழுத்தான மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இணைய பங்களாதேஷ் ஆர்வம் தெரிவித்துள்ளது. அதேநேரம் இந்த கூட்டணியில் இணைந்தாலும், பிற நாடுகளுடனான தனது உறவுகளையோ, வெளியுறவு கொள்கையையோ மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது என்று பங்களாதேஷ் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான், துருக்கி, சவுதி ஆகிய நாடுகள் இணைந்து இப்போது ஒரு கூட்டமைப்பை உருவாக்கியுள்ளது. மற்ற இஸ்லாமிய நாடுகளையும் இதில் இணைத்து கிட்டத்தட்ட இஸ்லாமிய நேட்டோ போன்ற ஒரு அமைப்பை உருவாக்கும் முயற்சியில் இந்த நாடுகள் ஈடுபட்டுள்ளன.
இது தொடர்பாக சவுதி அரேபிய தூதரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பங்களாதேஷ் வெளியுறவுத்துறை இணையமைச்சர் ஹுமாயூன் கோபிர், “மெக்கா ஒப்பந்தம் வங்கதேசத்துக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய தனித்துவமான ஒப்பந்தம். இப்போது தான் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளோம். எல்லாம் சுமுகமாகவே நடக்கிறது. இது வரும் காலத்தில் எப்படி போகிறது என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்” என்றார். சர்வதேச அரசியல் சூழல் வேகமாக மாறி வரும் நிலையில், வெளியுறவு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் கையாள வேண்டியுள்ளதாகவும் கோபிர் கூறினார். அதேநேரம் ஒரு குறிப்பிட்ட பாதுகாப்பு கூட்டணியில் இணைவது, மற்ற கூட்டணிகள் அல்லது நாடுகளுடன் இணைந்து செயல்படுவதை எந்த விதத்திலும் தடுக்காது என்றும் அவர் விளக்கினார்.
பங்களாதேஷ் இந்த கூட்டணியில் இணைய விரும்புவது இந்தியாவை கவனிக்க வைத்திருக்கிறது. இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “இந்தியாவின் பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அனைத்து விஷயங்களையும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்றும் தெரிவித்தார்.
பங்களாதேஷ் கடந்த காலங்களில் எப்போதும் எந்தவொரு இராணுவ கூட்டணியிலும் சேராமல், அணிசேரா வெளியுறவு கொள்கையை பின்பற்றி வந்துள்ளது. எனவே, மெக்கா ஒப்பந்தத்தில் இணைவது அந்த நீண்டகால கொள்கையில் மாற்றத்தைக் குறிக்கலாம் என்று வெளியுறவு நிபுணர்கள் கூறுகின்றனர்.
பாகிஸ்தான், சவுதி அரேபியா , துருக்கி ஆகிய நாடுகள் ஏற்கனவே பல்வேறு பிராந்திய பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. பங்களாதேஷ் இதில் இணைந்தால் எதிர்காலத்தில் தேவையற்ற இராணுவ மோதல்களில் சிக்கக்கூடும். அதாவது சவுதி மீது அமீரகம் தாக்குதல் நடத்தினால் பங்களாதேஷும் அதில் இணைய வேண்டும்.

