Monday, June 22, 2026 11:00 am
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தனது 52வது பிறந்தநாளை இன்று (22) கொண்டாடுகின்றார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தனது முதல் பிறந்தநாளை சி. ஜோசப் விஜய் இன்று கொண்டாடுகிறார். இதனையொட்டி தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களும் ரசிகர்களும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.
முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு இந்திய பிரதமர் மோடி , திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழ் திரையுலகின் உச்ச நடிகராக வலம் வந்தவர் விஜய். கடந்த 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி 2 ஆம் திகதி ஒற்றை அறிக்கை மூலம் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்தார். இதுவரை நடிகராக பிறந்தநாளை கொண்டாடிய விஜய் இன்று முதலமைச்சராக தனது ‘முதல்’ பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
தற்போது சட்டசபை கூட்டத்தொடர் இடம்பெறும் நிலையில் சட்டசபையில் இன்று முதலமைச்சர் சி.ஜோசப் விஜய்க்கு சபாநாயகர் வாழ்த்து கூறி சபையை ஆரம்பித்துவைத்தார்.
விஜய்க்கு இந்தியா முழுவதும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி , மக்கள் நீதி மய்யம் நிறுவனர் கமல் ஹாசன் அண்ணாமலை , நடிகர் ராகவா லாரன்ஜ் உள்ளிட்ட பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கிருஷ்ணசாமி, தமிழிசை சௌந்தரராஜன், டி. டி. வி. தினகரன், நைனார் நாகேந்திரன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் மற்றும் பொதுத்துறை பிரபலங்களும் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
முதல்வர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தமிழகம் வெற்றிக்கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நலத்திட்ட உதவிகள் இரத்ததான முகாம்கள் மரக்கன்றுகள் நடுதல் , ஏழை மக்களுக்கு அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகின்றனர்.
முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக பொதுமக்கள் இலவசமாக வண்டலூர் உயிரியல் பூங்காவைப் பார்வையிடலாம் என்ற சிறப்பு அறிவிப்புகளும் விடுக்கப்பட்டுள்ளன.

