Tuesday, June 16, 2026 11:47 am
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் மற்றும் கடற்றொழில் , நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோருக்கு இடையிலான விசேட மரியாதை நிமித்தமான சந்திப்பொன்று நேற்று (15) முற்பகல் அமைச்சில் நடைபெற்றது.
தற்போதைய அரசாங்கம் பதவியேற்று இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகவுள்ள நிலையில் , நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும் , ஊழலற்ற நிர்வாகக் கலாசாரத்தை உருவாக்கவும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் எடுத்துள்ள முற்போக்கான நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் இதன்போது உயர்ஸ்தானிகருக்கு விளக்கமளித்தார். குறிப்பாக ‘திட்வா’ சூறாவளி போன்ற இயற்கை அனர்த்தங்களின் போது பாதிக்கப்பட்ட மீனவ சமூகத்திற்கும் நாட்டிற்கும் கனேடிய அரசாங்கமும் மக்களும் வழங்கிய மனிதாபிமான உதவிகளுக்கு அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் அமைதியான சூழல் குறித்துக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் , பல தசாப்தங்களுக்குப் பின்னர் வீதித் தடைகள் நீக்கப்பட்டு பிரதான வீதிகள் திறக்கப்பட்டுள்ளமை மற்றும் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகள் முறைப்படுத்தப்பட்டுள்ளமை ஆகியவற்றின் ஊடாக மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கை பிறந்துள்ளதாகச் சுட்டிக்காட்டினார். தேசிய ஒருமைப்பாட்டிற்காக வடபகுதி மக்கள் வழங்கிய வரலாற்று ரீதியான ஆணை குறித்தும் அவர் இதன்போது விளக்கமளித்தார்.
இக்கலந்துரையாடலில் கலந்துகொண்ட அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச , இலங்கையின் கடற்றொழில் துறையை வெறும் வாழ்வாதாரத் தொழிலாக மாத்திரமன்றி , நவீன கைத்தொழில் மயமாக்கப்பட்ட ஒரு துறையாக மாற்றுவதே அரசாங்கத்தின் இலக்கு எனத் தெரிவித்தார். இதற்காக கனடா வசமுள்ள உயர்மட்ட உயிரியல் தொழில்நுட்பம் , நவீன மீன்பிடிக் கலன் வடிவமைப்பு மற்றும் நீரியல் வளர்ப்புத் தொழில்நுட்பங்களை இலங்கைக்குப் பெற்றுக்கொள்வதில் உள்ள ஆர்வத்தை அவர் வெளிப்படுத்தினார்.
கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் இதன்போது கருத்துத் தெரிவிக்கையில் , கனடாவின் புதிய Indo-pacific மூலோபாயத்தின் கீழ் இலங்கையுடன் கடல்சார் பாதுகாப்பு மற்றும் கடற்றொழில் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுவதாக வலியுறுத்தினார். இலங்கையிலுள்ள முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புகள் குறித்து எதிர்காலத்தில் விரிவான திட்ட முன்மொழிவுகள் ஊடாக மேலதிகமாகக் கலந்துரையாட இதன்போது இணக்கம் எட்டப்பட்டது.
இந்நிகழ்வில் கனேடிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் மற்றும் வர்த்தகப் பிரிவின் பிரதானி உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

