Tuesday, May 12, 2026 2:20 pm
கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு விடுத்த அறிவித்தலுக்கு அமைய, இன்று (12) முற்பகல் வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ , சுமார் இரண்டரை மணித்தியாலம் வாக்குமூலம் அளித்த பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
ஸ்ரீலங்கன் எர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் வானூர்திகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் அந்த ஆணைக்குழு மேற்கொண்டு வரும் விசாரணைக்கு அமைவாகவே முன்னாள் ஜனாதிபதி இன்று அழைக்கப்பட்டிருந்தார்.
இந்த கொடுக்கல் வாங்கலின் போது 2 மில்லியன் டொலர் நிதியை இலஞ்சமாகப் பெற்றதாக, அண்மையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த அந்த நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவிற்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
இதன்போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு மூன்று சந்தர்ப்பங்களில் 60 மில்லியன் ரூபா பணம் வழங்கப்பட்டதாக கபில சந்திரசேன தெரிவித்திருந்ததாக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு இதற்கு முன்னர் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது.
அதன்படி, இந்தச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்காக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை தருமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கமையவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

