Thursday, April 30, 2026 12:34 pm
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் (SLC) புதிய இடைக்காலக் குழுவின் தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரட்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் அதன் செயற்குழு உறுப்பினர்கள் விளையாட்டுத்துறை அமைச்சரிடம் தமது இராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்ததை அடுத்து இந்த அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது.
இந்த புதிய இடைக்காலக் குழு ஒன்பது உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இதன் தலைவராக எரான் விக்ரமரட்ன செயற்படவுள்ளதுடன், ஏனைய உறுப்பினர்களாக முன்னாள் ஜாம்பவான்களான ரொஷான் மஹாநாம, குமார் சங்கக்கார, சிதத் வெத்தமுனி ஆகியோருடன் துஷிர ரடெல்லா, அவந்தி கொலம்பகே, பிரகாஷ் ஷாப்டர், உப்புல் குமாரப்பெரும மற்றும் டினால் பிலிப்ஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, ஷம்மி சில்வா தலைமையிலான நிர்வாகத்தினரின் இராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
மேலும், 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் 31 மற்றும் 34 ஆம் பிரிவுகளின் கீழ் அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு இணங்க, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகம் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சின் கீழ் தற்காலிகமாகக் கொண்டுவரப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் விளையாட்டில் தற்போது நிலவிவரும் பல்வேறு நிர்வாகச் சிக்கல்கள் மற்றும் பின்னடைவுகளுக்கு முறையான தீர்வுகளைக் கண்டறிவதோடு, நிறுவனத்தின் நிர்வாகக் கட்டமைப்பில் பாரிய சீர்திருத்தங்களை மேற்கொள்வதே இந்த விசேட இடைக்காலக் குழுவின் பிரதான நோக்கம் என விளையாட்டு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

