Tuesday, April 7, 2026 2:23 pm
ஹட்டன் சிங்கிமலை வனப்பகுதியில் உள்ள மலை உச்சியில் சிக்கித்தவித்த வெளிநாட்டு யுவதி ஒருவர் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவு அதிகாரி, ஆய்வாளர் உட்பட ஹட்டன் பொலிஸாரின் குற்றப்பிரிவு அதிகாரிகள் குழு ஒன்றே குறித்த வெளிநாட்டு யுவதியை மீட்டுள்ளனர்.
நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாமைச் சேர்ந்த 20 வயதான மாணவியான லூனா துகாட் அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிற மாணவர்களுடன் இலங்கைக்கு வருகைந்தந்து ருஹுனு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்துள்ளார்.
அவர் ஹட்டனின் பொன்னகர் வீதியில் உள்ள ஒரு தன்னார்வ தொண்டு நிறுவன அலுவலகத்தில் தனது சில நண்பர்களுடன் தங்கியிருந்து சிங்கிமலை சிகரத்தை நோக்கி ஆராய்ச்சி ஒன்றிற்காக சென்றுள்ளார்.
நேற்று காலை சிங்கிமலை சிகரத்தைப் பார்க்கச் செல்வதாகக் கூறி சென்ற யுவதி கீழே இறங்க முடியாதுள்ளதாக ஹட்டனில் உள்ள அரசு சாரா நிறுவன அலுவலகத்தின் பொறுப்பு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஹட்டன் பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து போலிஸ் குழுவினர் சிங்கிமலை வனப்பகுதி வழியாக மலை உச்சிக்குச் சென்று யுவதி அமர்ந்திருந்த இருப்பிடத்தினை கண்டுபிடித்து யுவதியை மீட்டுள்ளனர்.

