Thursday, April 2, 2026 3:58 pm
நாட்டில் நிலவும் கடுமையான வெப்பத்தை பொதுமக்கள் எவரும் அலட்சியப்படுத்த வேண்டாம் எனவும் இதனால் உயிரிழப்புக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் சுகாதார அமைச்சின் சமூக மருத்துவ ஆலோசகரான வைத்தியர் இனோகா சுரவீர எச்சரித்துள்ளார்.
கடும் வெப்பம் காரணமாக வெப்பத் தசைப்பிடிப்பு, வெப்பச்சோர்வு, மரணத்தை ஏற்படுத்தக்கூடிய பக்கவாத பாதிப்புக்கு ஏற்பட நேரிடலாம்.
நீரிழிவு, இதய நோய்கள், சிறுநீரக நோய்கள் மற்றும் புற்றுநோய்கள் போன்ற நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இந்நாட்களில் மிக அவதானமாக இருக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விவசாயிகள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் போன்ற வெளிப்புற பணியாளர்கள் உடல் நிலை குறித்து விழிப்புடன் இருக்கவேண்டும். அவர்கள் அதிகளவில் நீர் அருந்தவேண்டும். மது, கோப்பி, இனிப்புப் பானங்களைத் தவிர்க்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்ப நிலையை குறைக்க இளநீர்,எலுமிச்சை, ஒரெஞ்ச் பழச்சாறுகளை அருந்துவதும் வெள்ளரிக்காய், தர்பூசணி போன்றவற்றை உண்பதும் நல்லது எனவும் வெளியே செல்லும்போது வெளிர் நிறப் பருத்தி ஆடைகளை அணிந்து செல்வது நல்லது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
