Tuesday, March 31, 2026 9:09 am
மனிதாபிமான அடிப்படையில், ஈரான் மக்களுக்காக அவசர மருத்துவ பொருட்கள் , மனிதாபிமான உதவிகளை இந்தியா செய்து வருகிறது. கடந்த மார்ச் 18ஆம் திகதி இந்தியா தனது முதல் கட்ட மருத்துவ உதவி பொருட்களை ஈரானுக்கு, ஈரான் ரெட் கிரசன்ட் சோசைட்டி மூலம் அனுப்பி இருந்தது. தொடர்ந்து இந்தியாவிடம் மருத்துவ பொருட்கள் வாங்குவதற்காக ஈரானில் இருந்து விமான ஒன்று புறப்பட தயாராக இருந்தது.
இந்த நிலையில் அந்த விமானம் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு உதவி பொருட்கள் பெற செல்ல இருந்த ஈரான் விமானம் அமெரிக்கா நடத்திய வான்தாக்குதலில் சேதமடைந்ததாக ஈரான் அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். உதவி பொருட்கள் மற்றும் மருத்துவ பொருட்கள் எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டிருந்த விமானம் சேதம் அடைந்து இருப்பது உதவி பெறுவதை பாதிப்பதாக அந்த நாடு கூறியுள்ளது.
ஈரானின் மஷ்ஹத் (Mashhad) விமான நிலையத்தில் நேற்று அமெரிக்கா நடத்தியதாக கூறப்படும் வான்தாக்குதலில், Mahan Air நிறுவனத்துக்குச் சொந்தமான ஒரு பயணிகள் விமானம் சேதமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விமானம் ஏப்ரல் 1ஆம் திகதி இந்தியாவுக்குச் செல்ல இருந்ததாகவும் ஈரான் மக்களுக்கான அவசர மருத்துவ பொருட்கள், மனிதாபிமான உதவிகளை எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது என ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது. ஆனால், இந்த தாக்குதல் குறித்து அமெரிக்கா உறுதிப்படுத்தவில்லை. இதுவரை எந்த தகவலும் கூறவில்லை. Mahan Air என்பது ஈரானில் தனியார் நிறுவனமாக செயல்படும் விமான சேவை ஆகும். இது மேற்கு ஆசியா, மத்திய ஆசியா, தென் ஆசியா உள்ளிட்ட பல பகுதிகளுக்கு விமான சேவைகளை வழங்கி வருகிறது.

