Wednesday, March 25, 2026 3:48 pm
சமூக வலைத்தளங்களில் வைரலாகிய காணொளி ஒன்றின் அடிப்படையில் பாதுகாக்கப்பட்ட உயிரினமான மலைப்பாம்புடன் நடனமாடிய இளம் பெண் ஒருவரை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மார்ச் மாதம் 20ஆம் திகதி கொழும்பு ராயல் மாஸ் எரீனா வளாகத்தில் இடம்பெற்ற அழகிப் போட்டியின் போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. போட்டியின் ஒரு அங்கமாக குறித்த இளம் பெண் உயிருள்ள மலைப்பாம்பு ஒன்றை வைத்து நடனமாடியுள்ளார்.
வனவிலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்புச் சட்டத்தின்படி பாதுகாக்கப்பட்ட ஊர்வன இனமான மலைப்பாம்பை காட்சிப்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
குறித்த பெண் அந்த மலைப்பாம்பை புத்தளம் பகுதியைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து வாடகைக்கு பெற்று நிகழ்ச்சி முடிந்ததும் அதனை மீண்டும் ஒப்படைத்துள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட குறித்த பெண் கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

