Tuesday, March 24, 2026 11:37 am
உலக நாடுகளின் கவனத்தைப் பெற்ற இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல் தற்போது வேறு ஒரு பரிணாமத்தை நோக்கி நகருகின்றது.
ஹொர்மூஸ் நீரிணையை ஈரான் விடுவிக்க அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கொடுத்திருந்த 48 மணித்தியால காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்து விட்டது. மூன்று நாடுகளுக்குமிடையிலான போரின் அடுத்த நகர்வு என்ன என்பது குறித்து அனைத்துதரப்பிலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.
ஈரான் மீதான போர் 24 நாட்களை கடந்த நிலையில் அமெரிக்காவினால் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த தாக்குதலை 5 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடியாக அறிவித்தார்.
தனது சமூக ஊடகப் பக்கத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள ட்ரம்ப், ஈரானுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் மற்றும் விவாதங்கள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டார். நடைபெறும் பேச்சுவார்த்தைகளின் வெற்றியைப் பொறுத்து ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான இராணுவத் தாக்குதல்களை 5 நாட்களுக்கு ஒத்திவைக்க இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த வாரம் முழுவதும் ஈரானுடன் இராஜதந்திர ரீதியிலான விவாதங்கள் தொடரும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
ட்ரம்பின் இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் பெரிதும் பேசப்படும் விடயமாக காணப்படுகின்றது. ட்ரம்பின் திடீர் மாற்றத்திற்குப் பின்னால் ஈரானின் கடுமையான எச்சரிக்கை இருப்பதாகவும், போரின் போது அமெரிக்கா அடைந்த பின்னடைவு தான் இந்த அறிவிப்பிற்கான காரணமாக இருக்கலாம் எனவும் இந்த நகர்வு ஈரானை தாக்குவதற்கான பெரும் திட்டமிடலாக கூட இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.
எது எவ்வாறு இருப்பினும் போர் நிறுத்தத்தின் மூலம் உலக நாடுகள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் ட்ரம்பின் இந்த அறிவிப்பு தொடர்பில் ஈரானின் பதில் முரண்பாட்டையே ஏற்படுத்தியுள்ளது.
ஈரானுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தையினால் போர் நிறுத்தத்தை ட்ரம்ப் அறிவித்த நிலையில், அமெரிக்காவுடன் ஈரான் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.
மேற்கு ஆசியாவில் உள்ள அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் எங்கள் இலக்குகளாக இருக்கும் என்ற எச்சரிக்கையை ஈரான் வெளியிட்ட பின்னரே டிரம்ப் தனது நிலைப்பாட்டில் மாற்றம் காட்டியதாகவும் ஈரான் குறிப்பிட்டுள்ளது.
ஐந்து நாட்களுக்கு ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி கூறியபோதும் மத்திய கிழக்கில் பரவலாக தாக்குதல்கள் இடம்பெற்றே வருகின்றன.
ஈரானுடன் பேச்சு இடம்பெறுவதாகவும் அதன் முன்னேற்றம் கருதியே ஐந்து நாள்களுக்கு தாக்குதல் நிறுத்தப்படுவதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார். எனினும் அமெரிக்காவுடன் எவ்வித பேச்சும் இடம்பெறவில்லை என்று ஈரான் தெரிவித்திருந்தது.
இந்தநிலையில் கடந்த சில மணித்தியாலங்களில் பல்வேறு நாடுகளில் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. ஜெருசலேமில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக சர்வதேச தகவல்கள் வெளியாகியுள்ளன. டெக்சாஸ் மாநிலத்தின் போர்ட் ஆர்தரில் அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றிலும் வெடிப்புச் சம்பவம் பதிவாகியுள்ளது.
பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து திறன்களையும் பயன்படுத்துவோம் என ஈரானின் கத்தம் அல்-அன்பியா மத்திய படைத் தலைமையகத்தின் பேச்சாளர் இப்ராஹிம் சோல்ஃபாகரி தெரிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான உறவுகள் தொடர்ந்தும் பதற்றநிலையிலேயே நீடித்து வருகின்றன.
இதேநேரம் கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் ஆரம்பமானது முதல் ஈரான் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்த புள்ளிவிபரங்களை அமெரிக்க மத்திய கட்டளையகம் வெளியிட்டுள்ளது.
இதன்படி ஈரானுக்குள் சுமார் 9000 இற்கும் மேற்பட்ட இலக்குகள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன என்றும் ஈரானுக்குச் சொந்தமான 140 கப்பல்கள் மற்றும் படகுகள் அழிக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ட்ரம்பின் போர் நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து நேற்று பிரென்ட் மசகு எண்ணெய் விலை 10 சதவீதத்துக்கும் மேல் வீழ்ச்சி அடைந்தது. ஆனால் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறிய தகவலை தெஹ்ரான் மறுத்துள்ளதால் சர்வதேச சந்தையில் பிரென்ட் மசகு எண்ணெய் விலையானது மீண்டும் 100 அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளது.
கடந்த பெப்ரவரி 28-ம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரான் மீது வான்வழித் தாக்குதலைத் தொடங்கின. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்த நிலையில் ஈரானும் பதிலடித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியது.
சர்வதேச நாடுகள் பலவும் ஐ.நா சபையும் போரை நிறுத்தத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
அமெரிக்கா இஸ்ரேல் ஈரான் ஆகிய நாடுகளிடையே காணப்படும் போர் மேகத்தினால் உலக நாடுகள் தளம்பல் நிலையை எதிர்நோக்கியுள்ளன.
இந்தப் போரினால் எரிபொருள் விலையேற்றம் ஒரு புறம் உணவுப் பொருட்களின் விலையேற்றம் ஒரு புறம் என பொதுமக்களின் வாழ்க்கை போராட்டமாக மாறி வருகின்றமை குறிப்பிடத்தக்கதொன்றாகும்.

