Tuesday, March 3, 2026 2:20 pm
நோர்வேயின் துணை வெளிவிவகார அமைச்சர் அண்ட்ரியாஸ் கிராவிக்கை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சணக்கியன் ஆகியோர் சந்தித்துள்ளனர்.
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை, வடக்கு–கிழக்கு பகுதிகளின் நிலவரம், மக்களின் வாழ்வாதார சவால்கள், ஜனநாயக செயல்முறைகள், மற்றும் நீடித்த அரசியல் தீர்வின் அவசியம் போன்ற பல்வேறு விடயங்கள் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக இரா.சணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.
போருக்குப் பிந்தைய காலகட்டம் தொடர்பான கேள்விகள், நீதியை நிலைநிறுத்தும் செயல்முறைகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைப்பதை உறுதி செய்வது மற்றும் உண்மையான நல்லிணக்கம் குறித்து விரிவாக கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.
அரசியல் அதிகாரப் பகிர்வு, அரசியலமைப்பு சீர்திருத்தங்களின் அவசியம், மற்றும் தமிழர் மக்களின் நீண்டநாள் அரசியல் உரிமைகளை மதிக்கும் வகையில் அர்த்தமுள்ள மற்றும் நிலையான தீர்வை உருவாக்குவதின் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.

