Tuesday, October 27, 2026 9:38 pm
இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட, தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர், விசாரணைக்காக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் (TID) 72 மணிநேர தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சண்டிலிப்பாய், மசியப்பிட்டியைச் சேர்ந்த 50 வயதான அவர் இந்தியாவில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்த பின்னர், ஒக்டோபர் 26 ஆம் திகதி இரவு கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு, 2015 ஆம் ஆண்டில் இந்தியப் பாதுகாப்புப் படையினரால் அவர் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, இந்திய நீதிமன்றம் அவருக்குத் தண்டனை விதித்திருந்தது.
அவர் இலங்கை வந்தடைந்ததும், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் (TID) அவரைத் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்தனர். அந்த நபர் தொடர்பான புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

