Monday, February 23, 2026 12:40 pm
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பங்கேற்கவிருந்த சிறப்பு உரை நிகழ்வுகளை ஒக்ஸ்போர்ட் யூனியன் (Oxford Union) மற்றும் கேம்பிரிட்ஜ் யூனியன் (Cambridge Union) ஆகிய இரண்டும் ரத்து செய்துள்ளன.
இன்று பெப்ரவரி 23 ஒக்ஸ்போர்ட் யூனியனில் அவர் உரையாற்றத் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கு முன்னதாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகமும் அவரது வருகையை ரத்து செய்திருந்தது.
இது குறித்து ஒக்ஸ்போர்ட் யூனியன் தலைவர் கேத்தரின் யாங் கூறுகையில், “மாணவர்களின் நேரடி மற்றும் வெளிப்படையான கேள்விகளுக்குக் களம் அமைத்துக் கொடுப்பதே எமது நோக்கம். ஆனால் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்களால் பாதுகாப்பாகவும் நேரடியாகவும் கேள்விகளை எழுப்ப முடியாது என உணர்கின்றனர். சமமான நிலையில் விவாதம் நடத்த முடியாத சூழலில் இந்த நிகழ்வை நடத்துவது சரியாக இருக்காது,” எனத் தெரிவித்தார்.
கேம்பிரிட்ஜ் யூனியன் தரப்பில் கூறுகையில், “தற்போதைய சூழலில் இந்த விடயம் குறித்து ஒரு சமநிலையான மற்றும் திறந்த விவாதத்தை முன்னெடுக்க முடியாது என நாங்கள் நம்புகிறோம். எனவே எமது நிலைக்குழு இந்த ரத்து முடிவை எடுத்துள்ளது,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

