Tuesday, February 10, 2026 4:08 pm
2019 ஆம் ஆண்டுக்கு முன்னர் பெறப்பட்ட சிம் அட்டைகளை மீள்பதிவு செய்யவும், சிம் அட்டை விநியோகத்தில் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள 2019.08.02 அன்று வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள், அதற்குப் பின்னர் பெறப்பட்ட சிம் அட்டைகளுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 ஆகஸ்ட் 2 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட பல சந்தாதாரர்களின் முழுமையான தகவல்கள் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் இல்லாததினால் குற்றச் செயல்கள் தொடர்பான சட்டப் புலனாய்வுகளின் போது சரியான தகவல்கள் இல்லாதது தடையாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் 2019.08.02 ஆம் திகதிக்கு முன்னர் பெறப்பட்ட பழைய சிம் அட்டைகளின் உரிமையாளர் தகவல்கள் மீண்டும் முறைப்படி பதிவு செய்யப்படும் என அமைச்சரவை முடிவில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு சிம் அட்டைகளை வழங்குவதில் புதிய ஒழுங்குமுறைகள் பின்பற்றப்படவுள்ளது.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

