Monday, February 9, 2026 1:10 pm
பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது பேருவளையில் இயங்கி வந்த கருக்கலைப்பு நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டதுடன், மருத்துவர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையில் வலான மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வாடிக்கையாளரைப் போன்று வேடமணிந்த புலனாய்வு அதிகாரி ஒருவர் கருக்கலைப்புக்காக நேரத்தை ஒதுக்கிக்கொண்டார். அதனைத் தொடர்ந்து களுத்துறை நீதவான் நீதிமன்றில் தேடுதல் அனுமதியைப் பெற்றுக்கொண்ட விசேட பொலிஸ் குழு நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டது.
மாறுவேடத்தில் சென்ற பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு கருக்கலைப்பு செய்யத் தயாரான சந்தர்ப்பத்திலேயே சந்தேகநபரான மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் போது கருக்கலைப்புக்குப் பயன்படுத்தப்படும் பெருமளவிலான மருந்து வகைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைதானவர் முன்னாள் வைத்திய அதிகாரி எனவும், ஒரு கருக்கலைப்புக்காக அவர் 45000 ரூபாய்யிற்கும் அதிகமான பணத்தை அறவிட்டு வந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

