Friday, February 6, 2026 5:51 pm
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண இறுதிப் போட்டியில், இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி 80 பந்துகளில் 175 ஓட்டங்களை குவித்து அசத்தியுள்ளார். இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது
14 வயதான சூர்யவன்ஷி, 32 பந்துகளில் அரைசதம் அடித்து, ஒரு வரலாற்று இன்னிங்ஸைத் தொடங்கினார்.இந்திய அணியின் கேப்டன் ஆயுஷ் மாத்ரேவுடன் இணைந்து சூர்யவன்ஷி, இரண்டாவது விக்கெட்டுக்கு 142 ஓட்டங்கள் குவித்து வலுவான அடித்தளம் அமைத்தார்.
இங்கிலாந்து பந்து வீச்சைச் சிதறடித்த அவர், 55 பந்துகளில் மின்னல் வேக சதம் விளாசினார். இது 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண வரலாற்றில் பதிவான இரண்டாவது அதிவேக சதமாகும்.அவர் இறுதியில் 80 பந்துகளில் 175 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் 15 சிக்சர்களும் 15 பவுண்டரிகளும் அடங்கும். இதன் மூலம், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத்தில் இந்திய வீரர் ஒருவர் அடித்த அதிகபட்சத் தனிப்பட்ட ஸ்கோரை அவர் பதிவு செய்தார்.
அண்டர் 19 கிரிக்கெட் வரலாற்றில் சதம் அடித்த இளம் வீரர் என்ற பாபர் அசாமின் சாதனையை வைபவ் சூர்யவன்ஷி முறியடித்தார். பாபர் அசாம், கடந்த 2010ஆம் ஆண்டு அண்டர் 19 உலக கிண்ணத்தில் சதம் அடித்தார். தற்போது புதிய சாதனையை வைபவ் படைத்திருக்கிறார். இத்தொடரில் அதிக சிக்சர்களை விளாசிய தென் ஆப்பிரிக்காவின் டிவால்ட் பிரெவிஸ் (18) சாதனையை சூர்யவன்ஷி முறியடித்தார்.
இறுதிப் போட்டியின் 15 சிக்சர்கள் உட்பட, அவரது மொத்த சிக்சர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்து, ஒரே உலகக் கிண்ணத் தொடரில் ஒரு வீரரால் அடிக்கப்பட்ட புதிய உலக சாதனையாக இது பதிவானது.கடந்த 2025 டிசம்பரில் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ணத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிராக 14 சிக்சர்கள் அடித்த தனது சொந்த சாதனையை சூர்யவன்ஷி இந்த ஆட்டத்தில் முறியடித்தார்.
இதன் மூலம் ஒரு இன்னிங்ஸில் 15 சிக்சர்கள் அடித்து புதிய உலக சாதனை படைத்தார். அவரது 175 ஓட்டங்கள், ஐசிசி நடத்தும் எந்த வயதுப் பிரிவு உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும் அடிக்கப்பட்ட அதிகபட்சத் தனிப்பட்ட ஸ்கோர் ஆகும். 2007 ஒருநாள் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் அடம் கில்கிரிஸ்ட் அடித்த 149 ஓட்டங்கள் சாதனையை இது விஞ்சியது.

