Saturday, May 9, 2026 8:00 pm
தவெக ஆட்சி அமைக்க விசிகவும் ஆதரவு தெரிவித்த நிலையில், தவெக தலைவர் விஜய் ஆளுநரை மீண்டும் சந்திப்பதற்காக நேரம் கேட்டு, ஆளுநர் மாளிகைக்கு கிளம்பினார். ஆனால், அவர் பாதி வழியிலேயே அவர் வீடு திரும்பியுள்ளார். ஆளுநர் அவரை சந்திக்க நேரம் ஒதுக்காததால், விஜய்யின் பதவியேற்பு மீண்டும் தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
தங்களது ஆதரவு கடிதத்தை விசிக தவெகவிடம் வழங்கியது. அதோடு, புதிய திருப்பமாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-ம் தவெகவிற்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்தது. இதையடுத்து, தவெகவிற்கு மொத்தம் 120 இடங்கள் கிடைத்துள்ளன.
இதைத் தொடர்ந்து, ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக, விஜய் நேரம் கேட்டுவிட்டு, ஆளுநர் மாளிகைக்கு கிளம்பிச் சென்றார். ஆனால், செல்லும் வழியிலேயே, ஆளுநர் நேரம் ஒதுக்கவில்லை என்ற தகவல் கிடைக்கவே, அவர் மீண்டும் வீடு திரும்பியுள்ளார். இதையடுத்து, ஆளுநருக்கு கடும் கண்டனங்கள் எழுந்துவருகின்றன.
தவெக தலைவர் விஜய் இன்று மாலை ஆளுநரை சந்தித்து, பெரும்பான்மை கடிதத்தை வழங்கி, அவரை உடனடியாக ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தால், திங்கட் கிழமை விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றிருப்பார். ஆனால், அவரை சந்திக்க ஆளுநர் மறுத்துவிட்டதால், விஜய் முதலமைச்சராக பதவியேற்பது மீண்டும் தள்ளிப் போயுள்ளது.
இதனிடையே, பெரும்பான்மை கடிதத்தை நாளை ஆளுநர் மாளிகையில் ஒப்படைக்குமாறு ஆளுநர் அலுவலகம் விஜய்யிடம் தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநர் இன்று இரவு கேரளா செல்ல உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்த நிலையில் தான், தற்போது ஆளுநர் விஜய்க்கு சந்திப்பிற்கான நேரம் ஒதுக்கவில்லை என்று கருதப்படுகிறது.

