Wednesday, May 6, 2026 6:11 pm
காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியில் கலகக்குரல் எழுந்துள்ளது. தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் இந்த நடவடிக்கையை சந்தர்ப்பவாதம் என்று விமர்சனம் செய்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அமோக வெற்றி பெற்றது. கட்சி சந்தித்த முதல் தேர்தலிலேயே 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தனிப்பெரும் கட்சியாக வந்தாலும் கூட மெஜாரிட்டி கிடைக்கவில்லை. மெஜாரிட்டிக்கு 118 எம்எல்ஏக்கள் தேவை. இதனால் விஜய் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், 2 கம்யூனிஸ்ட்கள், விசிக, பாமக ஆகியவற்றிடம் ஆதரவு கோரியுள்ளார். இதில் முதல் கட்சியாக காங்கிரஸ் கட்சி தவெகவிற்கு ஆதரவு வழங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் மொத்தம் 29 தொகுதிகளில் போட்டியிட்டு 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. திமுக கூட்டணியை விட்டு இன்று வெளியேறிய காங்கிரஸ் விஜய்யின் தவெகவிற்கு ஆதரவு வழங்குவதாக கூறியுள்ளது. அதுமட்டுமின்றி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இன்று சென்னையில் விஜய்யை சந்தித்து பூங்கொத்து கொடுத்து ஆதரவு கொடுத்தனர். விஜய்யுடன் வரும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் 2029 நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதன்மூலம் திமுக – காங்கிரஸ் கூட்டணி அதிகாரப்பூர்வமாக முடிவடைந்துள்ளது.
திமுக கூட்டணியை முறித்து தவெக உடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துள்ளதை ஒரு தரப்பினர் கொண்டாடி வரும் நிலையில் இன்னொரு தரப்பினர் அதிருப்தியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து இந்த கூட்டணிக்கு எதிராக முதல் கலகக்குரல் வெளிவந்துள்ளது. இதுபற்றி தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் அலிம் அல்புகாரி தனது எக்ஸ் பக்கத்தில், ”கொள்கைப் பிடிப்பே அரசியல், சந்தர்ப்பவாதம் அல்ல. இதே சந்தர்ப்பவாதத்தை பாஜகவும் அதிமுகவும் செய்து வருகிறது. இப்போது நாம் அதை செய்யக்கூடாது” என கூறியுள்ளார்.

