Saturday, May 23, 2026 4:08 pm
பிரெஞ்சு ஓபன் ஒற்றையர் பிரிவுக்கான பிரதான சுற்றுப் போட்டி, பாரிஸில் வியாழக்கிழமை, மே 21 ஆம் திகதி ஆரம்பமானது. ஏனைய போட்டிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகும். ஜூன் 7 ஆம் திகதி ரோலண்ட் கேரோஸில் நிறைவடைய உள்ளது.
பிரெஞ்சு ஓபன் போட்டியின் பரிசுத் தொகை 9.5 சதவீதம் உயர்ந்து, மொத்தப் பரிசுத் தொகை 61.7 மில்லியன் யூரோக்களாக (72.69 மில்லியன் அமெரிக்க டொலராக ) அதிகரித்துள்ளது.
ஆண்கள் , பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர்கள் ஒவ்வொருவரும் 2.8 மில்லியன் யூரோக்களைப் பெறுவார்கள்.
ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் நடப்பு ஆடவர் ஒற்றையர் சம்பியன் ஆவார். இருப்பினும், மணிக்கட்டு காயம் காரணமாக அவர் இந்த ஆண்டுப் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில், அமெரிக்காவின் கோகோ காஃப் நடப்பு சம்பியனாக உள்ளார்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் ஸ்பெயினின் மார்செல் கிரானோலர்ஸ் , ஆர்ஜென்ரீனாவின் ஹொராசியோ செபல்லோஸ் ஆகியோர் பட்டத்தை வென்றனர். மகளிர் இரட்டையர் பிரிவில் முழுக்க முழுக்க இத்தாலிய ஜோடியான ஜாஸ்மின் பாவோலினி ,சாரா எர்ரானி ஆகியோர் கடந்த ஆண்டு வெற்றியாளர்களாக இருந்தனர். எர்ரானி தனது சக நாட்டவரான ஆண்ட்ரியா வவஸ்ஸோரியுடன் இணைந்து கலப்பு இரட்டையர் பட்டத்தையும் கைப்பற்றினார்.
ஆண்கள் , பெண்கள் சக்கர நாற்காலி ஒற்றையர் பிரிவுகளில், கிரேட் பிரிட்டனைச் சேர்ந்த ஆல்ஃபி ஹெவெட்டும், ஜப்பானைச் சேர்ந்த யூயி கமிஜியும் வெற்றி பெற்றனர்.
இஸ்ரேலின் கை சாஸன் சக்கர நாற்காலி குவாட் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்றார்.
சக்கர நாற்காலி ஆடவர் இரட்டையர் பட்டத்தை பிரிட்டனைச் சேர்ந்த ஆல்ஃபி ஹெவிட், கோர்டன் ரீட் இணை கைப்பற்றியது. அதே சமயம், மகளிர் பிரிவில் ஜப்பானின் யூயி கமிஜி மற்றும் தென்னாப்பிரிக்காவின் கோதட்சோ மான்ட்ஜேன் ஆகியோர் வெற்றியாளர் கோப்பையை வென்றனர்.
சக்கர நாற்காலி குவாட் இரட்டையர் பிரிவில் சாசனும், டச்சுக்காரரான நீல்ஸ் விங்கும் வெற்றி பெற்றனர்.

