Wednesday, November 4, 2026 8:48 pm
புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்த பதற்றச் சூழல்களையடுத்து, 2019-ல் இந்தியாவுடனான வர்த்தகம் இடைநிறுத்தப்பட்டதிலிருந்து, பாகிஸ்தான் சுமார் 40 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளது என்று பாகிஸ்தான்-இந்தியா வர்த்தக மன்றத்தின் தலைவர் நூர் முஹம்மது கசூரி, வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
இரு நாடுகளும் வர்த்தக உறவுகளை மீட்டெடுத்தால் இரு தரப்பு வணிகங்களுக்கும் பயனளிக்கும் முதலீடு, சுற்றுலா ,பிராந்திய ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை உருவாக்கும். இந்தத் தடை காரணமாக பாகிஸ்தானிய வணிகங்கள் அத்தியாவசிய மூலப்பொருட்கள் மற்றும் பிற பொருட்களைத் தொலைதூரச் சந்தைகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது போக்குவரத்து மற்றும் சரக்குக் கட்டணங்களையும், விநியோக நேரங்களையும் அதிகரித்தது.
பாகிஸ்தானின் மருந்துத் தொழில், இந்தியாவில் கிடைக்கும் மூலப்பொருட்களைச் சார்ந்துள்ளது.அண்டை நாட்டிலிருந்து இறக்குமதி செய்வதன் மூலம் ஆண்டுக்கு 2 பில்லியன் முதல் 3 பில்லியன் அமெரிக்க டொலர் வரை சேமிப்பு ஏற்படக்கூடும்.
இதற்கிடையில், உள்நாட்டுப் பருத்தி உற்பத்தி சரிந்து வருவதால், ஜவுளித் துறைக்குக் கூடுதல் செலவுகள் ஏற்பட்டன. ஜவுளி ஆலைகள் பிறேஸில், எகிப்து, சீனா ,அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து பருத்தியைக் கொள்முதல் செய்ய நிர்பந்திக்கப்பட்டது.இதனால், இதன் விளைவாக சுமார் 5 பில்லியன் அமெரிக்க டொலர் கூடுதல் செலவு ஏற்பட்டது.
இந்தத் துறைகளில் இந்தியாவுக்கு கணிசமான உற்பத்தித் திறன் இருந்தபோதிலும், பாகிஸ்தான் தொலைதூர சந்தைகளிலிருந்து சீனி, உரம், சிமெண்ட், பெட்ரோலியப் பொருட்கள், இரும்பு மற்றும் எஃகு, காய்கறிகள் மற்றும் கனரக இயந்திரங்களை இறக்குமதி செய்து வருகிறது.
இருதரப்பு வர்த்தகம் மீண்டும் தொடங்கப்படுவதால் போக்குவரத்துச் செலவுகள் குறைந்து, உரிய நேரத்தில் விநியோகம் உறுதிசெய்யப்படும். இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் புவியியல் ரீதியாக பாகிஸ்தானுக்கு அருகில் இருப்பதால், பெட்ரோலிய இறக்குமதி மலிவாகவும் வேகமாகவும் நடைபெற வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.

