Monday, September 21, 2026 4:40 pm
சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளதாகக் கூறப்படும் இலங்கை நாட்டைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச திங்கள்கிழமை (21) கொழும்பில் உள்ள தனது அலுவலகத்தில் சந்தித்தார்.
அனோஜனின் தற்போதைய நிலை ,அவரை விடுவிப்பதற்கான முயற்சிகள் குறித்து விவாதிக்க, அவரது தந்தை தம்பிராசா சிவராசா, தாய் ரசமாணிக்கம் யோகலட்சுமி , சகோதரர் சிவராசா ஹம்சிதன் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இச்சந்திப்பின் போது, அனோஜனின் வழக்கு ,அவரை விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அறிந்துகொள்ள, இலங்கையில் உள்ள சவூதி அரேபியத் தூதுவருடன் பிரேமதாச தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு பேசினார்.
சவூதி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனோஜனைத் தொடர்புகொண்டு அவரது நலம் குறித்தும் அவர் விசாரித்தார்.அதனைத் தொடர்ந்து, அனோஜனை விடுவிப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்த தகவல்களை அறிந்துகொள்ள, இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளருடனும் பிரேமதாச பேசினார்.
இனம் அல்லது மதம் சார்ந்த வேறுபாடுகளைக் கடந்து, அனோஜனை விடுவிக்கத் தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் அவரது குடும்பத்தினருக்கு உறுதியளித்தார்.
அனோஜனின் வழக்கை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், இராஜதந்திர வழிகள் மூலம் சவுதி அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு ஏற்கனவே உறுதிப்படுத்தியிருந்தது. இருப்பினும், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை அமைச்சு இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

