Friday, November 27, 2026 11:35 am
உஸ்பெகிஸ்தானின் சீர்திருத்தங்களை ஆதரிப்பதற்காக 800 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான நிதியுதவித் தொகுப்பை உலக வங்கி அங்கீகரித்துள்ளதாக, அந்த வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியுதவித் தொகுப்பை உலக வங்கியின் நிர்வாக இயக்குநர்கள் குழு புதன்கிழமை அன்று அங்கீகரித்தது. உஸ்பெகிஸ்தானில் அதிக எண்ணிக்கையிலான , சிறந்த ஊதியம் கொண்ட வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், தனியார் துறையின் பங்களிப்பை விரிவுபடுத்துதல், உலகப் பொருளாதாரத்துடன் ஒருங்கிணைப்பை ஆழப்படுத்துதல், பசுமையான, அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தச் சீர்திருத்தங்கள், நாடு முழுவதும் உள்ள பெண்கள், விவசாயிகள் , வணிக நிறுவனங்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும் நோக்கம் கொண்டவை. 2029 முதல் 2031-ஆம் ஆண்டுக்குள், சுமார் 2,75,000 கூடுதல், தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்க இந்தச் சீர்திருத்தங்கள் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிதியுதவியானது, அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களில் சீர்திருத்தங்களைத் தொடருதல் மற்றும் நியாயமான போட்டிக்கான விதிகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கொள்கை நடவடிக்கைகளைச் செயல்படுத்த உஸ்பெகிஸ்தான் அரசாங்கத்திற்கு உதவும்.

