Monday, November 9, 2026 2:22 pm
அத்தனகலு ஓயாவில் நீர்மட்டம் உயர்ந்து வருவதைத் தொடர்ந்து, கம்பஹா மாவட்டத்தில் உள்ள ஒன்பது பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட தாழ்வான பகுதிகளுக்கு நீர்ப்பாசனத் திணைக்களம் ‘அம்பர்’ அளவிலான வெள்ள திவுலபிட்டிய, மிரிகம, அத்தனகல்ல, மஹர, கம்பஹா, மினுவாங்கொட, ஜா-எல, கட்டானை ,வத்தளை ஆகிய பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்தனகலு ஓயா வடிநிலத்தின் மேல் மற்றும் இடைப்பகுதிகளில் பெய்த பலத்த மழை ,பஸ்னாகொட நீர்த்தேக்கத்தின் (Basnagoda Reservoir) மதகுகள் வழியாக நீர் வெளியேற்றப்படத் தொடங்கியுள்ளதால், அத்தனகலு ஓயாவில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆற்று நீர்மட்ட அளவீட்டு நிலையங்களில் பதிவான தரவுகளின் அடிப்படையில், அத்தனகலு ஓயா,உருவல் ஓயா (Uruwal Oya) பள்ளத்தாக்குகளை ஒட்டிய தாழ்வான பகுதிகளில் வரும் மணிநேரங்களில் வெள்ளம் ஏற்படக்கூடும் எனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்களும், அப்பகுதிகளில் உள்ள சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பேரிடர் முகாமைத்துவ அதிகாரிகளிடம் நீர்ப்பாசனத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
இன்று (09) பிற்பகல் 12:30 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த வெள்ள எச்சரிக்கை, நாளை (10) பிற்பகல் 12:30 மணி வரை நடைமுறையில் இருக்கும்.

