Sunday, May 31, 2026 8:45 pm
அமெரிக்காவின் 250வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வரவிருக்கும் இசை நிகழ்ச்சிகளை இரத்து செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சனிக்கிழமை அறிவித்தார்.. பல இசைக் கலைஞர்கள் விலகியதைத் தொடர்ந்து, அவற்றுக்குப் பதிலாகத் தான் தலைமை தாங்கும் ஒரு அரசியல் பேரணியை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
“அதிக விலை வாங்கும், யாரும் கேட்க விரும்பாத, சலிப்பூட்டும் இசையை வழங்கும், குறை கூறுவதைத் தவிர வேறு எதுவும் செய்யாத பாடகர்களைக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, 250வது ஆண்டு விழாவிற்காக ஒரு மாபெரும் ‘மேக் அமெரிக்கா கிரேட் அகெய்ன்’ பேரணியை நாம் நடத்த வேண்டும்,” என்று டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டு, “இதை ரத்து செய்யுங்கள்” என்றும் சேர்த்துள்ளார்.
ஜூலை 4 விடுமுறையை ஒட்டி வாஷிங்டனில் நடைபெறவிருந்த இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, பல இசைக் கலைஞர்கள் விலகினர். அவர்களில் சிலர், இந்த நிகழ்வு அரசியல்மயமாக்கப்படுவதைக் காரணமாகக் கூறினர்.
டிரம்ப் ஆதரவு பெற்ற பொது-தனியார் அமைப்பான ஃப்ரீடம் 250-ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட, நேஷனல் மாலில் நடைபெறும் ஒரு பெரிய நிகழ்வின் ஒரு பகுதியாக, இந்த இசை நிகழ்ச்சிகள் ஜூன் 25 ஆம் திகதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது.
நாட்டுப்புறப் பாடகி மார்டினா மெக்பிரைட் , 1980-களின் பாய்சன் இசைக்குழுவின் முன்னணிப் பாடகரும் கிளாம் ராக்கருமான பிரெட் மைக்கேல்ஸ் உள்ளிட்ட கலைஞர்கள், இந்த இசை நிகழ்ச்சித் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தனர்.

