Friday, October 30, 2026 5:11 pm
அயர்லாந்தின் டப்ளின் விமான நிலையத்தில், ரையன்ஏர் (Ryanair) நிறுவனத்தின் பணியாளர்களுடன் ஏற்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த நிறுவனம் மீது இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார முன்வைத்த குற்றச்சாட்டுக்கு, அந்நிறுவனம் பதிலளித்துள்ளது.
குடிவரவு தொடர்பான கட்டாயச் சோதனைகளின் போது, விமான நிலைய நுழைவு வாயில் பணியாளர் விஸா தொடர்பான ஆவணங்களைக் கேட்டபோது, சங்கக்கார அவற்றை வழங்க மறுத்துவிட்டதாக ரையன்ஏர் தெரிவித்துள்ளது.
‘டெய்லி மெயில் ஸ்போர்ட்’ (Daily Mail Sport) ஊடகத்திடம் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தகுந்த ஆவணங்களைக் கோரியபோது, அந்தப் பயணி அவற்றை வழங்க மறுத்துவிட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
“இந்தச் சோதனைகள் நிறைவடைந்து, அவர் பயணம் செய்வதற்கான தகுதி உறுதி செய்யப்பட்ட பிறகு, அக்டோபர் 28 ஆம் திகதி டப்ளினிலிருந்து பிரிஸ்டலுக்குச் சென்ற அந்த விமானத்தில் அவர் பயணம் செய்தார்” என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
டப்ளின் விமான நிலையத்தில், ரையன்ஏர் பணியாளர்கள் தன்னிடம் மற்றும் தனது குடும்பத்தினரிடம் “பாரபட்சமான” மற்றும் “அச்சுறுத்தும்” வகையில் நடந்துகொண்டதாக சங்கக்கார குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்படும் சங்கக்கார, இந்தச் சம்பவம் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்த புதன்கிழமை பிற்பகல் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
“டப்ளினில் உள்ள ரையன்ஏர் (Ryanair) நிறுவனத்தின் பணியாளர்களிடம் யாராவது பாரபட்சமான நடத்தையை எதிர்கொண்டிருக்கிறீர்களா?” என ‘எக்ஸ்’ (X) தளத்தில் அவர் பதிவிட்டார்.

