Wednesday, November 18, 2026 10:15 pm
டில்லியில் நடந்த போராட்டத்தின் போது பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டது தொடர்பான வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு, ‘ஒவ்வொரு குடிமகனும் பத்திரிகையாளராக மாறினால் சிக்கல்களை உருவாக்கும்’ என்று கருத்து தெரிவித்தது. போராட்டங்களைச் செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்களுக்குத் தடையிருக்கக் கூடாது என சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டு இருந்தது.
இந்த உத்தரவு, ரீல்ஸ் வெளியிடுவோர் மற்றும் சமூக வலைதள பிரபலங்களுக்கு பொருந்தாது என டில்லி பொலிஸார் சுப்ரீம்கோர்ட்டில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தனர். ”ரீல்ஸ் வீடியோ வெளியிடுபவரை ஊடகத்தினருடன் ஒப்பிட முடியாது என்பதால், பதற்றமான போராட்ட களத்தில் அவர்களுக்கு அதேபோன்ற சுதந்திரமான நடமாட்டத்தை அனுமதிக்க முடியாது.
பல போராட்டக்காரர்கள் ரீல்ஸ் வெளியிடுவோராக இரட்டைப் பாத்திரத்தில் செயல்பட்டதால், அவர்களைப் போராட்டக்காரர்களிடமிருந்து வேறுபடுத்துவது பாதுகாப்பு பணியில் இருந்த பொலிஸாருக்கு கடினமாக இருந்தது. உண்மையான பத்திரிகையாளர்களுக்கு தங்கள் பணிகளைத் தொடர சுதந்திரம் வழங்கப்பட்டது.
சட்டவிரோதப் போராட்டங்களில் பங்கேற்கும் பலர் கமரா, மைக் உடன் வந்து தங்களை பத்திரிகையாளர்களாக காட்டிக் கொள்ள முயற்சிக்கின்றனர். இத்தகைய நபர்களுக்கும், உண்மையான பத்திரிகையாளர்களுக்கும் இடையே வேறுபாடு காண்பதில் களத்தில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாக டில்லி பொலிஸார் தெரிவித்தனர்.

