Friday, November 27, 2026 4:15 pm
பொலிஸ் காவல் நிலையங்களுக்குச் செல்லும் பொது மக்கள் தங்கள் கைபேசிகளை எடுத்துச் செல்வதைத் தடுக்கும் வகையில் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெளிவுபடுத்தியுள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை (27)பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், பொலிஸ்நிலையங்களுக்குச் செல்லும்போது பொதுமக்கள் கைபேசிகளைக் கொண்டு செல்வதைத் தடை செய்யும் சுற்றறிக்கை ஏதும் வெளியிடப்படவில்லை என்று கூறி, அது தொடர்பான குற்றச்சாட்டுகளை மறுத்தார்.
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த விஜேபால, அத்தகைய சுற்றறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை என்றும், பொதுமக்கள் தங்கள் கைபேசிகளுடன் பொலிஸ் நிலையங்களுக்குள் தாராளமாகச் செல்லலாம் என்றும் தெரிவித்தார்.
பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களிடம் கைபேசிகளைக் கொடுக்க முயற்சிக்கும்போது, சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று அமைச்சர் விளக்கினார்.
இத்தகைய சூழல்களைத் தவிர, பொதுமக்கள் பொலிஸ் நிலையங்களுக்குள் கைபேசிகளை எடுத்துச் செல்வதற்கு எந்தத் தடையும் இல்லை என்பதை அவர் மீண்டும் தெளிவுபடுத்தினார்.

