Wednesday, October 28, 2026 4:57 pm
மேக்ஸ் ஆப் மீடியா லிமிடெட்,அதன் இணை நிறுவனங்கள் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை மத்திய வங்கி (CBSL) தனது தடைசெய்யப்பட்ட பிரமிடு திட்டங்களின் பட்டியலை 27 ஆக விரிவுபடுத்தியுள்ளது.
இன்று புதன்கிழமை (28) வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், மேக்ஸ் ஆப் மீடியா லிமிடெட், அதன் இணை நிறுவனங்களான மேக்ஸ் எல்.கே (பிரைவேட்) லிமிடெட் , மேக்ஸ் மீடியா லங்கா (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றுடன் இணைந்து, ஒரு தடைசெய்யப்பட்ட பிரமிடு திட்டத்தில் ஈடுபட்டு, அதனை நடத்தி, ஊக்குவித்துள்ளது என விசாரணைகள் தீர்மானித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
திருத்தப்பட்ட 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் 83(C) பிரிவின் கீழ் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
புதிதாக அடையாளம் காணப்பட்ட நிறுவனங்கள் மத்திய வங்கியின் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம், அடையாளம் காணப்பட்ட நிறுவனங்கள் மற்றும் செயலிகளின் மொத்த எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.
இந்தப் பட்டியலில், Tiens Lanka Health Care (Pvt) Ltd., Best Life International (Pvt) Ltd., Sport Chain, OnmaxDT, MTFE, Fastwin (Pvt) Ltd., Qnet/Questnet, Ledger Block, Beecoin App மற்றும் TM App போன்ற, முன்னரே அடையாளம் காணப்பட்ட பல நிறுவனங்களும் அடங்கும்.
வங்கிச் சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட திட்டங்களாகக் கருதப்படும் நிறுவனங்கள் மற்றும் செயலிகளை அடையாளம் காட்டி, மத்திய வங்கி தனது நிதி மற்றும் நுகர்வோர் தொடர்புத் துறை மூலம் வெளியிட்ட ஒரு பொது அறிவிப்பில் இந்தப் புதுப்பிக்கப்பட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.

