Tuesday, November 24, 2026 3:28 pm
சீனாவில் இருந்து பங்களாதேஷுக்கு சென்ற கப்பலில், 100 ஏவுகணைகள் தயாரிப்பதற்கு தேவையான, 4.05 இலட்சம் கிலோ எடையுள்ள இரசாயனம் இருந்ததை, இந்தோனேஷிய கடற்படை பறிமுதல் செய்துள்ளது.
இந்தோனேஷிய கடற்படை இடைமறித்து சோதனை நடத்திய போது அதில், ரொக்கெற், ஏவுகணைக்கான உந்து சக்தியை வழங்கும் எரிபொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் சக்தி வாய்ந்த ஆக்சிஜனேற்ற இரசாயனமான சோடியம் பெர்குளோரேட், 4.05 இலட்சம் கிலோ இருந்தது.இ லட்சக்கணக்கான பதிவு செய்யப்படாத சிம் கார்டுகள் இருந்ததும் கண்டறியப்பட்டதையடுத்து, அவை பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்த 7ம் திகதி, வடக்கு சுமத்ராவின் பெலாவன் கடற்கரைக்கு அப்பால், கொமொரோஸ் நாட்டு கொடியுடன், ‘ஸ்டார் லைன்’ என்ற சரக்கு கப்பல் எரிபொருள் நிரப்புவதற்காக நிறுத்தப்பட்டிருந்தது.
கப்பலின் சந்தேகத்திற்குரிய வழித்தடம், தகவல் தொடர்பு சிக்னல்கள் அணைக்கப்பட்டிருந்தது ,அனுமதியற்ற இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த போது, ரேடியோ அழைப்புகளுக்கு பதிலளிக்காதது ஆகிய காரணங்களால் சந்தேகமடைந்த இந்தோனேஷிய கடற்படையின் ரோந்து கப்பல், இக்கப்பலை இடைமறித்து சோதனை செய்தது. கப்பலில் இருந்த 36 கன்டெய்னர்களில், 4.05 லட்சம் கிலோ சோடியம் பெர்குளோரேட் இருந்தது கண்டறியப்பட்டது.
ரொக்கெற் , ஏவுகணை உந்து சக்திகளில் சக்திவாய்ந்த ஆக்சிஜனேற்றியாக செயல்படும் இந்த ரசாயனம், 100 ஏவுகணைகள் வரை தயாரிக்க போதுமானதாகும். இதனுடன், 54 பேலட்டுகளில் லட்சக்கணக்கான பதிவு செய்யப்படாத மொபைல் போன் சிம் கார்டுகளும் இருந்தன. இவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
காலாவதியான பதிவு ஆவணங்களுடன் சென்ற அக்கப்பல், சீனாவின் லியான்யுங்காங் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுள்ளது. 8ம் திகதி, பங்களாதேஷின் மோங்லா துறைமுகத்தை அடைய திட்டமிட்டிருந்தது. பறிமுதல் செய்யப்பட்ட ரசாயனம், ஆயுத தயாரிப்புக்குத்தான் அனுப்பப்பட்டதா என்பது குறித்து இன்னும் நிரூபணம் ஆகவில்லை. உரிமையாளர்கள் யார்; பங்களாதேஷில் யாரிடம் ஒப்படைக்க இவை கொண்டு செல்லப்படுகின்றன என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
சோடியம் பெர்குளோரேட் கொண்டு ஏவுகணை தயாரிக்கும் உள்நாட்டு தொழிற்சாலை வசதி பங்களாதேஷிடம் இல்லை என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த இரசாயனத்தின் தொகுப்பு, ஏவுகணை தொழில்நுட்பத்திற்கு மட்டுமின்றி, காகித ஆலைகளிலும், பட்டாசு, வெடிபொருட்கள் துறையிலும் பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

