Monday, September 28, 2026 8:24 pm
ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், இலங்கையின் முன்னணி வீரரான ருமேஷ் தரங்க பத்திரகே ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றார்.
நகோயா நகரின் மிசுஹோ பார்க் தடகள மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், தனது மூன்றாவது முயற்சியில் 88.33 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து முன்னிலை பெற்ற பத்திரகே, அந்த இடத்தைத் தக்கவைத்துக்கொண்டு தங்கப் பதக்கத்தை உறுதி செய்தார். தனது இறுதி முயற்சியில் 88.55 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து அவர் தனது முந்தைய தூரத்தை மேம்படுத்தினார். இந்தியாவின் யாஷ்வீர் சிங் 84.72 மீற்றர் தூரத்துடன் வெள்ளிப் பதக்கத்தையும், அதே நாட்டைச் சேர்ந்த ரோஹித் யாதவ் 84.35 மீற்றர் தூரத்துடன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
இலங்கையின் சுமேத ரணசிங்க 78.08 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து இப்போட்டியில் ஆறாவது இடத்தைப் பிடித்தார். பத்திரகேயின் இந்த வெற்றி, 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை வென்ற முதல் தங்கப் பதக்கமாகும்.

