Friday, November 13, 2026 4:45 pm
அவுஸ்திரேலியா, இலங்கை ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பயணத் தேவையை கருத்தில் கொண்டு, நவம்பர் 15 ஆம் திகதி முதல் மெல்போர்னுக்கான தனது வாராந்திர விமான சேவைகளை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மேலும் மூன்றால் அதிகரிக்கிறது. இதனுடன், அவுஸ்திரேலியாவிற்கான அந்நிறுவனத்தின் மொத்த வாராந்திர விமான சேவைகளின் எண்ணிக்கை 14-ஆக உயர்கிறது.
இந்த கூடுதல் விமானங்கள் செவ்வாய், வியாழன் ,ஞாயிறு ஆகிய கிழமைகளில் இயக்கப்படும். ஏற்கனவே நடைமுறையில் உள்ள தினசரி மெல்போன் விமான சேவையுடன் இவை கூடுதலாகச் சேர்க்கப்படுகின்றன.
திருத்தப்பட்ட கால அட்டவணையின்படி, UL608 என்ற விமானம் கொழும்பிலிருந்து பிற்பகல் 2:15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5:40 மணிக்கு மெல்போனைச் சென்றடையும். திரும்பும் பயணமாக, UL609 என்ற விமானம் மெல்போர்னிலிருந்து காலை 7:10 மணிக்கு புறப்பட்டு, நண்பகல் 12:10 மணிக்கு கொழும்பை வந்தடையும்.
ஏற்கனவே உள்ள தினசரி விமான சேவையும் தொடர்ந்து செயல்படும்; இதன்படி, UL604 என்ற விமானம் கொழும்பிலிருந்து நள்ளிரவு 12:35 மணிக்கு புறப்பட்டு, மாலை 4:00 மணிக்கு மெல்போனைச் சென்றடையும். அதன் மறுமார்க்க பயணமான UL605, மெல்போனிலிருந்து மாலை 5:30 மணிக்கு புறப்பட்டு, இரவு 10:30 மணிக்கு கொழும்பை வந்தடையும்.
சுற்றுலாப் பயணிகள் , அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர்களின் வருகையால், இலங்கைக்கு வரும் சுற்றுலாச் சந்தைகளில் மிக வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் ஒன்றாக அவுஸ்திரேலியா உருவெடுத்துள்ளது.

