Saturday, June 13, 2026 10:04 pm
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் குரூப் ‘டி’ (Group D) பிரிவின் முதல் போட்டியில், பராகுவே அணிக்கு எதிராக அமெரிக்க அணி 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று அசத்தியுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் தொடக்கம் முதலே அமெரிக்க வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ஆட்டத்தின் 7-வது நிமிடத்திலேயே அமெரிக்காவின் தீவிரமான தாக்குதலுக்கு பலன் கிடைத்தது. புலிசிக் ,வெஸ்டன் மெக்கின்னி ஆகியோரின் சிறந்த ஒருங்கிணைப்பு காரணமாக, பராகுவே அணியின் மிட்ஃபீல்டர் டேமியன் போபாடிலாவின் காலில் பட்டு ‘ஓன் கோல்’ (Own goal) ஆனது. இதனால் அமெரிக்கா 1-0 என முன்னிலை பெற்றது.
31-வது நிமிடத்தில் ஃபோலாரின் பாலோகுன் மூலம் இரண்டாவது கோல் கிடைத்தது. லெஃப்ட்-பேக் ஆன்டோனி ராபின்சன் கொடுத்த பாஸை புலிசிக் பெற்று, அதனை பாலோகுனிடம் தள்ள, அவர் மிக நேர்த்தியாக கோல் வலையை நோக்கி உதைத்து கோலாக்கினார்.
முதலாவது பாதி முடிவடைவதற்கு சற்று முன்பாக, டில்மேன் கொடுத்த அருமையான த்ரூ பாஸைப் பெற்ற பாலோகுன், பரகுவே டிஃபெண்டரை ஏமாற்றி தனது இடது காலால் பந்தை உதைத்து மீண்டும் ஒரு அற்புதமான கோலை அடித்தார். இதனால் முதல் பாதியில் அமெரிக்கா 3-0 என வலுவான முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் அமெரிக்க அணியின் கப்டன் புலிசிகிற்கு ஓய்வளிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக செபாஸ்டியன் பெர்ஹால்டர் களம் இறக்கப்பட்டார். இதனால் அமெரிக்காவின் ஆட்டம் சற்று நிதானமடைந்தது. இதை சாதகமாக்கிக் கொண்ட பராகுவே அணி 73-வது நிமிடத்தில் தனது முதல் கோலை அடித்தது. கோல்கீப்பர் ஆர்லாண்டோ கில் உதைத்த லாங் கிக்கை அமெரிக்க வீரர் கிறிஸ் ரிச்சர்ட்ஸ் தடுக்கத் தவறியதால், பராகுவேயின் இளம் வீரர் ஜூலியோ என்சிசோ பந்தைப் பெற்று மொரிசியோவிடம் கொடுத்தார். அவர் அதனை எளிதாக அமெரிக்க கோல்கீப்பர் மேட் ஃப்ரீஸைக் கடந்து கோலாக மாற்றினார்.
ஆட்டத்தின் 82-வது நிமிடத்தில் களம் புகுந்த ஜியோ ரெய்னாவுக்கு, கடந்த கால சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க புதிய வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாகப் பயன்படுத்திய அவர், ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் அலெக்ஸ் ஃப்ரீமேனின் அசிஸ்ட்டைப் பெற்று, ஒரு நேர்த்தியான ஷாட் மூலம் கோல் அடித்தார். இதன் மூலம் அமெரிக்க அணி 4-1 என்ற கணக்கில் வெற்றியை உறுதி செய்தது.
உலகக் கிண்ண வரலாற்றில் அமெரிக்க அணி ஒரே போட்டியில் பதிவு செய்த அதிகபட்ச கோல் எண்ணிக்கை இதுவாகும். இப்போட்டியில் அமெரிக்கா, பராகுவேயின் பெனால்டி பகுதிக்குள் 53 முறை பந்துடன் நுழைந்து ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் பரகுவே அணி ஒன்பது முறை மட்டுமே இந்த வாய்ப்பை பெற்றது.
FIFA உலகக் கிண்ணத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய வெற்றிகள்
அமெரிக்கா 3 – 0 பெல்ஜியம் (1930)
அமெரிக்கா 3 – 0 பரகுவே (1930)
அமெரிக்கா 4 – 1 பரகுவே (2026)
அமெரிக்கா 2 – 0 மெக்சிகோ (2002)

