Saturday, September 19, 2026 5:32 pm
பதஞ்சலி முனிவர் தொடர்ச்சியாக தமது விபூதி பாதத்தில், யோக சாதனையின் பயனான சித்திகளை விபரமாக தமது சூத்திரங்கள் மூலம் அறியத் தருகிறார். உடலில் நடைபெறும் பிராண சக்தி ஓட்டமானது, வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. இதயப் பகுதியில் பிராண வாயு என்றும், வயிற்றுப் பகுதியில் சமான வாயு என்றும், இடை மற்றும் கால் பகுதியில் அபான வாயு என்னும், கழுத்து மற்றும் தலைப்பகுதியில் உதான வாயு என்றும், உடல் முழுவதும் வியாபித்திருந்து இயங்கும் வாயு வியானன் என்றும் அழைக்கப்படுகிறது.
‘உதானன் எனும் உடலின் மேற்பகுதியில் இயங்கும் வாயுவின் மீதான மேலாண்மையால் நீரினாலும், சேற்றினாலும், முட்களினாலும் பாதிக்கப்படாதிருப்பதோடு உடலும் இலேசாகிறது.’ – சூத்திரம் 3.40
பிராணாயாம பயிற்சிகளினால் உடல் இலகுவாகுவதை பலரும் உணர்ந்திருப்பார்கள். பலர் இந்த சூத்திரத்தை நீரிலும் , சேற்றிலும், முட்களிலும் நடக்க முடியும் என்னும் விளக்கம் கூறியிருப்பார்கள். யோக சாதனையில் மேம்பட்ட யோகிகளுக்கு இது சாத்தியமானது தான். எனினும் இங்கே நீர் என்பதை எமது உணர்ச்சிகளின் மீதான வெற்றியாகவும், சேறு என்பதை எமது ஆன்ம உணர்வை மூடியிருக்கும் அழுக்குகளுக்கும், முட்களை ஆன்மீக பாதையில் ஏற்படும் பல்வேறு தடைகளை வென்று முன்னேறுவதையும் குறிப்பதாகக் கொள்ளலாம். இவ்வாறு யோக சாதனைகளின் மூலம் இத்தடைகள் விலகுவதோடு, உடல் இலேசாவதும் சாத்தியமாகிறது.
‘சமான வாயு மீதான தேர்ச்சியினால் யோகியின் உடலைச் சுற்றி ஒளி வீசுகிறது’ – சூத்திரம் 3.41
உடலின் வயிற்றுப் பகுதியில் இயங்குவது சமான வாயுவாகும். நாம் உட்கொள்ளும் உணவை செரிப்பதற்குத் தேவையான திரவங்களின் சுரப்பிற்கும், சக்தியாக மாற்றும் நெருப்பாகவும் இருந்து தொழிற்படுகிறது. இந்த சமான வாயுவின் மீதான தேர்ச்சி பிராணாயாமம், பிரம்மசரியம் போன்ற யோக சாதனைகளால் சாத்தியமாவதோடு, உடலைச் சுற்றி ஒளியும் வீசுகிறது என்கிறார் பதஞ்சலி முனிவர்.
பிராணாயம பயிற்சிகளினால் கீழ் நோக்கி இயங்கும் அபான வாயு, மேல் நோக்கி இயங்கும் பிராண வாயுவோடு இணைந்து கொள்கிறது. இதனால் மணிப்பூரக சக்கரம் செயற்படுத்தப்படுவதோடு, உடலைச் சுற்றி இயங்கும் பிராண நாடிகளில் சக்தியோட்டம் நிரம்புகிறது. உடல் ஒளிவீசுவதன் காரணம் இதுவே. இந்த பதஞ்சலி சூத்திரத்திற்கு இணையான பாடல் திருமந்திரத்திலும் காணப்படுகிறது.
‘தன்மைய தாகத் தழைத்த பகலவன்
மென்மைய தாகிய மெய்ப்பொருள் கண்டிடின்
புன்மைய தாகிப் புலன்களும் போயிட
நன்மைய தாகிய நற்கொடி காணுமே. ‘ – திருமந்திரம் – 689
தவ யோகத்தால் சிறந்து விளங்கும் ஒளிவடிவான உடல் பெற்ற யோகி, மிக நுண்ணிய உள்ளொளியை, ஆன்ம நிலையை உணர, பொன் போலும் ஒளிவீசும் உடலோடு, புலனின்ப நாட்டம் விட்டு, உயிருக்கு நன்மை செய்யும் பரஒளியை தன்னுள்ளே காணுவான்.
‘காதிற்கும் ஆகாயத்திற்கும் உள்ள தொடர்பில் சம்யமம் செய்வதால் அமானுஷ்ய ஒலிகளைக் கேட்கும் ஆற்றல் உண்டாகிறது’ – சூத்திரம் 3.42
ஆகாயம் அல்லது வெளி என்னும் ஊடகத்தினூடாக ஒலி பிரயாணம் செய்கிறது. கேட்டல் என்ற புலன் உணர்வுக்கும், கேட்க உதவும் எமது புலனான காதிற்கும் இடையிலான தொடர்பின் மீது சம்யமம் செய்வதால் அல்லது பிரித்துப் பார்க்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்வதால் அமானுஷ்ய ஒலிகளைக் கேட்கக் கூடியதாக இருக்கும்.
புலன்கள் அடங்கிய தவயோகத்தில் கேட்கும் ஒலிகளை திருமூலர் பின்வரும் இரு பாடல்களில் பட்டியலிடுகிறார்.
மணிகடல் யானை வார்குழல் மேகம்
அணிவண்டு தும்பி வளைபேரி கையாழ்
தணிந்தெழு நாதங்கள் தாமிவை பத்தும்
பணிந்தவர்க் கல்லது பார்க்கஒண் ணாதே – திருமந்திரம் – 606.
கடலோடு மேகம் களிறொடும் ஓசை
அடவெழும் வீணை அண்டரண் டத்துச்
சுடர்மன்னு வேணு சுரிசங்கின் ஓசை
திடமறி யோகிக்கல் லாற்றெரி யாதே – திருமந்திரம் – 607
மணியோசை, கடலோசை, யானையின் பிளிறல், புல்லாங்குழல், மேகம், வண்டு, தும்மி, சங்கு, பேரிகை, யாழ், வீணை, வேத முழக்கம் போன்ற ஒலிகளை திடதித்தம் கொண்ட யோகிகளினால் கேட்கக் கூடியதாக இருக்கும் என்கிறார் திருமூலர்.
‘அறிவையும் அகங்காரத்தையும் தாண்டிய நிலையில் எழும் மன விருத்திகளின் மீது சம்யமம் செய்வதால் உடல் தாண்டிய அனுபவமும், ஆன்ம ஒளியை மறைக்கும் திரையும் விலகுகிறது.’ – சூத்திரம் – 3.44
எமது மனமானது எண்ணங்களின் குவியலால் நிரம்பியுள்ளது. பல தேவையற்ற எண்ணங்களில் இருந்து விடுபட வேண்டிய தேவை உள்ளது. எமது புலன்களின் வழி செயற்பட்டு நான் உடல் என்ற அகங்கார உணர்வால் இது ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து விடுதலை பெறும் போது மனம் வெறுமையடைகிறது. அது பிரபஞ்ச ஆற்றலையும், இறை அறிவையும் பெறுவதற்கான இடத்தை வழங்குகிறது.
ஆணவமும் அறிவும் நம் கண்களை மறைக்கும் பொது இந்த உடலில் மட்டுமே செயல் புரிவதாக மனம் பிழையாக எண்ணுகிறது. புலன்களை வென்ற நிலையில் மனமானது விடுதலையாகி பிரபஞ்ச மனமாகிறது. (Universal Mind) அது நான்-உணர்வில் (Ego) இந்த உடலின் நரம்புகளில் மட்டும் கட்டுண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை. இந்த நான்-உணர்வு இல்லாத நிலையில் மனதின் விருத்திகள், உண்மையான விருத்திகள் அல்லது உடலற்ற மாபெரும் நிலை எனப்பபடுகிறது. இதன் மீது சம்யமம் செய்வதனால் இருள் விலகுகிறது. ஆன்ம ஒளியில் பிரகாசிக்கலாம்.
எமது மனமானது பல்வேறு அனுபவங்கள், கருத்துக்களின் சுமை தாங்கியாக உள்ளது. இதிலிருந்து விடுபடும் போது மிஞ்சுவது பிரபஞ்ச மனமாகிறது. அது எல்லையற்றது, முடிவற்றது.
ஐம்பூதங்களின் தூல, சூட்சுமத் தன்மை, அவற்றின் பண்புகள், நிலை இவற்றின் மீது சம்யமம் செய்வதால் அவற்றினை வெற்றி கொள்ள முடிகிறது என்கிறார் அடுத்த சூத்திரத்தில். இதன் மூலம் நுண்ணிய தன்மை, பிற சித்திகள், மகிமை பெற்ற உடல், உடலின் குணங்கள் அழியாமை ஏற்படுகிறது. இந்த சூத்திரங்களின் வழி பதஞ்சலி முனிவர் கூற வருவது, யோகியானவன் அட்டமா சித்திகளையும் பெற்று விட்டதையே. விரும்பியதை அடையலாம். விரும்பியவற்றின் மீது ஆதிக்கம் செலுத்தலாம். யோகியின் உணர்வானது எங்கும் வியாபித்ததாக, மற்றவர்களின் மனங்களில் ஆதிக்கம் செலுத்த வல்லதாக, உருவாக்க வல்லதாக, எதையும் அடைய வல்லதாக மொத்தத்தில் பிரபஞ்ச மனம் என்பதன் விரிவாகவே அட்டமா சித்திகளை நோக்க வேண்டும்.
பதஞ்சலி முனிவரின் பார்வையில் காய சி்த்தி என்பதை, ‘இனிய உருவமும், அழகும், ஆற்றலும், அருளும், வைரம் போன்ற உடல் கட்டும் என்று வரையறுக்கிறார். யோக கலையில் காய சித்தி என்பது பல்வேறு சாதனைகள் மூலம் சாத்தியமாகிறது. ஆசனங்கள் மூலம் உடல் வலிமையும், நெகிழ்வுத் தன்மையும் அடைகிறது. உடலுக்குத் தேவையான பிராண சக்தி உணவின் மூலம் மட்டுமின்றி, சூரியன் மற்றும் அண்ட ஆற்றல் மூலமாகவும் ஒரு யோகியினால் பெற்றுக் கொள்ள முடியும். அந்த வகையில் பிராணாயாம பயிற்சிகள் மூலம் உடலின் நச்சுத் தன்மை வெளியேறுவது மட்டுமின்றி, தடையற்ற அண்ட ஆற்றலையும் யோகிகளினால் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது. எமது எண்ணங்கள் மூலமாகவும் நாம் சக்தி இழப்பை சந்திக்கின்றோம். எண்ணங்களினாலும் உணர்ச்சிகளினாலும் எமது உடலில் எந்தவித தாக்கங்களையும் உணராதவிடத்து, காயசித்தி அடையப்பெற்றுள்ளோம் என்பதை ஊகிக்கலாம். காயசித்தி ஏன் அவசியம் என்பதற்கு, தன்னை உணர்வதற்கு கால அவகாசத்தை தேடுவது என்பதே யோகிகளின் பதிலாக உள்ளது. திருமூலரின் பதிலும் இதுவே.
‘உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே’ – திருமந்திரம் 724
‘புலன்களின் புறச்சார்பு, அதிலிருந்து உண்டாகும் அறிவு, இந்த அறிவால் வரும் நான்-உணர்வு, இவற்றின் முக்குணங்கள், அவற்றினால் ஆன்மாவுக்கு வரும் அனுபவம் – இவற்றின் மீது சம்யம்ம் செய்வதால் புலன்கள் வெல்லப்படுகின்றன. -சூத்திரம் 3.47
ஐம்பூதங்களை வெல்வதால் காயசித்தி கிடைக்கிறது. புலன்களை வெல்வதன் மூலம் உடலானது மனதின் வேகத்தோடு செயற்படக் கூடிய ஆற்றலைப் பெறுகிறது. அதனோடு புலன்கள் உடலில் இருந்து பிரிந்து தனித்து நின்று செயல்புரியக் கூடிய ஆற்றலும், இயற்கையை வெல்லும் ஆற்றலும் சித்திகளாகக் கிடைக்கின்றன. புலன்களின் மீதான மேலாண்மையானது நமக்கு பற்றுகளில் இருந்து விடுதலை அளிக்கிறது. செயல்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவதும், அதன் பயன்களில் பற்றின்றி இருத்தலும் சாத்தியமாகிறது.
இயற்கையின் முக்குணங்களில் ஒன்றான சாத்வீக குணத்தில் ஒரு யோகி இருக்கும் போது கூட அவன் தன்னை முழுமையாக உணரவில்லை. சாத்வீக குணத்திற்கும் புருஷனுக்கும் (self) இடையில் உள்ள வேறுபாட்டினை உணரும் போதே எல்லா ஆற்றல்களும் அறிவும் உண்டாகின்றது. இத்தகையவர்களை நாம் கடவுளின் அவதாரம் என்றும் தீர்க்கதரிசிகள் என்றும் கொண்டாடுகிறோம். இத்தகையவர்கள் யாரையும் சார்ந்திராத, தன்னில் நிலைத்திட்ட, சகல அறிவும் ஆற்றல்களும் பெற்றவர்களாகின்றனர். இந்த சித்திகளிலும் பற்றினை விடும் போது உண்மையான கைவல்யம் (விடுதலை) கிடைக்கிறது
நான் என்றும் தான்என்றும் நாடிநான் சாரவே
தான் என்று நான் என்று இரண்டிலாத் தற்பதம்
தான் என்று நான்என்ற தத்துவம் நல்கலால்
தான்என்றும் நான்என்றும் சாற்றகில் லேனே. – திருமந்திரம் 1441
தான் வேறு நான் வேறு என்று இரண்டாக இல்லாத பரம்பொருள் திருவடியே நான் தேடி அடைய வேண்டியது என்று உணர்ந்தேன். தான் என்பது நீயே தான், என்ற உண்மையை உணரச் செய்ததால் இறைவன் என்றும் நான் என்றும் தனியே பிரித்து சொல்ல முடியாத பக்குவம் பெற்று விட்டேன் என்கிறார் திருமூலர்.
ஒவ்வொரு கணப்பொழுதின் மீதும் அதன் முன்னும் பின்னும் உள்ள காலத்தின் மீதும் சம்யமம் செய்வதால் விவேகம் உண்டாகிறது என்கிறார் பதஞ்சலி முனிவர். நாம் சாதாரணமாக எமது எண்ணங்களின் போக்கில் நமது வாழ்வு, ஒவ்வொரு நாளும் கடந்து செல்வதை கண்டுகொள்ளாமலே இருந்து விடுகிறோம். கணங்கள் தோறும் நமது எண்ணங்களையும் நம்மையும் அவதானிப்பதன் மூலம் நாம் இழந்தது எவ்வளவு என்பதை உணர்ந்து கொள்ள முடியும். காலத்தின் வேகத்தில் கரைந்து விடாமல் கணங்களில் எமது எண்ணங்களில் இருந்து இறந்து விட பழகிக் கொண்டால் காலத்தையே உண்மையில் வென்று விடலாம். இது யோக சாதனையாளர்களுக்கும் சகலருக்குமான முக்கிய பயிற்சி.

