Saturday, June 27, 2026 8:44 pm
சென்னை அண்ணா நகரில் இன்று நடைபெற்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் 32-வது பொதுக்குழு கூட்டம், தமிழக அரசியல் களத்தில் ஒரு மிகப்பெரிய அதிரடி திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.
கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ , பொருளாளர் மு.செந்திலதிபன் ஆகியோர் முன்னிலையில் கூடிய இந்த பொதுக்குழுவில், திமுக தலைமையிலான முற்போக்கு கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக வெளியேறுவதாக முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த ஒன்பது ஆண்டுகளாக தொடர்ந்த இந்த பந்தம் தற்போது முறிந்துபோனது தொண்டர்கள் மத்தியில் பலத்த விவாதத்தை கிளப்பியுள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலின்போதே மதிமுகவின் தனித்துவ அடையாளத்தை சிதைக்க கூட்டணியில் முயற்சிகள் நடந்ததாகவும், திராவிட கொள்கையை காக்கவே அதை தாங்கிக்கொண்டு களம் கண்டதாகவும் மதிமுக வேதனையோடு தெரிவித்துள்ளது.
தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, மக்கள் தீர்ப்புக்கு எதிராக அரங்கேறிய திரைமறைவு பேரங்களும், வெறும் 47 இடங்களை வென்ற அதிமுகவை மதவாத சக்திகளின் துணையோடு ஆட்சிப் பீடத்தில் அமர்த்த நடந்த ரகசிய வியூகங்களும் தங்களை அதிர்ச்சியடைய வைத்ததாக மதிமுக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.
தமிழக வெற்றி கழகத்திற்கு மக்கள் பேராதரவு தந்த நிலையில், இனியும் திமுக கூட்டணியில் நீடிப்பது அர்த்தமற்றது என்ற தொண்டர்களின் விருப்பத்திற்கிணங்கவே இந்த விலகல் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

