Friday, June 26, 2026 9:47 pm
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் இல்லத்திற்கு, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சென்று அவரை சந்தித்து பேசியுள்ளார். இந்ச் சந்திப்பின் போது பிரேமலதாவுடன் அவரது சகோதரரும் தேமுதிக நாடாளுமன்ற உறுப்பினருமான எல்.கே.சுதீஷும் உடனிருந்தார்.
அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சந்திப்பு, வெறும் “மரியாதை நிமித்தமான சந்திப்பு” என்று தேமுதிக தரப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டாலும், இதன் பின்னணியில் முக்கிய அரசியல் நகர்வுகள் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, வரவிருக்கும் தேர்தல்களிலும் திமுக கூட்டணியில் இருந்தே தாங்கள் தொடர விரும்புவதையும், கூட்டணியில் இருந்து விலகும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்பதை உறுதிப்படுத்தவுமே பிரேமலதா இந்த சந்திப்பை மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது.
இது குறித்து பிரேமலதா விஜயகாந்த் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில், “திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று அவரது இல்லத்தில் சந்தித்தேன்; இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு” என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து 10 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக, விருத்தாச்சலம் தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பு தேமுதிகவின் அரசியல் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது.

