Friday, June 5, 2026 12:34 pm
மன்னார், சவுத்பார் (South Bar) பகுதியில் நீண்டகாலமாகப் பராமரிப்பின்றி கைவிடப்பட்ட நிலையில் உள்ள மிகவும் பழமையான கத்தோலிக்க ஆலயம் ஒன்றில் , நேற்று முன்தினம் (03) மர்ம நபர்கள் சிலர் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஆலயமானது எவ்வித முழுமையான கட்டுமானங்களும் இன்றி , முற்றிலும் சேதமடைந்த நிலையில் பல வருடங்களாகக் காணப்படுகின்றது. மிகவும் பழைமை வாய்ந்த இந்த ஆலயப் பகுதியிலேயே குறித்த சட்டவிரோத அகழ்வுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ இடத்தில் , மர்ம நபர்கள் விட்டுச் சென்ற சில தடயங்களும் பொதுமக்களால் அவதானிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக , அகழ்வு இடம்பெற்ற பகுதியில் திஷ்டி நூல்கள், கற்கள் மற்றும் பூஜைக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் சில பொருட்களும் காணப்படுவதாக நேரில் பார்த்த மக்கள் தெரிவிக்கின்றனர்.
வரலாற்றுச் சின்னங்கள் அழிக்கப்படுவதையும், சட்டவிரோத புதையல் அகழ்வுகளையும் தடுக்க உரிய அதிகாரிகள் உடனடியாகச் செயல்பட்டு தகுந்த விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

