Monday, June 1, 2026 3:00 pm
யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டு 45 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இன்று (01) யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது யாழ்ப்பாணப் பொது நூலக ஸ்தாபகர் கே. எம். செல்லப்பா மற்றும் யாழ்ப்பாணப் பொது நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்ட அதிர்ச்சியிலும் வேதனையிலும் உயிரிழந்த அருட்கலாநிதி H.S தாவீது அடிகள் ஆகியோரின் உருவப்படத்திற்கு மலர் தூபி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து 45 ஆண்டுகள் நிறைவடைவதை குறிப்பிடும் வகையில் 45 விளக்குகள் ஏற்றப்பட்டது. தெற்காசியாவின் அறிவுக் களஞ்சியமாக போற்றப்பட்ட யாழ்பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 45 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் நிகழ்த்தப்பட்ட இச்சம்பவமானது இன்றும் மக்கள் மனதில் அகலாத ஒரு பேரிழப்பாகவே உள்ளது.
உலகப் பிரசித்தி பெற்ற அறிஞர்களால் விதந்துரைக்கப்பட்ட ஆசியாவின் மிகச் சிறந்த இந்த நூலகத்தில் பாதுகாக்கப்பட்ட தமிழின் மிக அரிய வரலாற்று ஆவணங்கள்இ பழமை வாய்ந்த ஓலைச்சுவடிகள் மற்றும் மேற்கத்தைய அறிஞர்களின் அறிவுச் செல்வங்கள் எனச் சுமார் 97000 அரிய வகை நூல்கள் இந்நூலக அழிப்பின் போது முற்றாக எரித்துச் சாம்பலாக்கப்பட்டன.
தமிழ் மக்களின் பண்பாட்டு மற்றும் அறிவின் அடையாளமாக யாழ்ப்பாணப் பொது நூலகம் விளங்கியமை குறிப்பிடத்தக்கது.

