Thursday, June 11, 2026 12:02 pm
கடந்த காலத்தில் மத்தியகிழக்கில் நிலவிய போர்பதற்றம் சற்று அமைதியடைந்திருந்த நிலையில் மீண்டும் பதற்றநிலை உருவாகியுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வந்த தற்காலிக போர்நிறுத்தம் முற்றிலும் உடைந்துள்ளது.
ஹார்மோஸ் ஜலசந்தியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க ராணுவத்தின் அப்பாச்சி (Apache) ஹெலிகாப்டரை ஈரான் சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து அமெரிக்கா இராணுவம் ஈரானிய இராணுவ இலக்குகள் மீது வான்வழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டரில் இருந்த இரு அமெரிக்க விமானிகளும் பஹ்ரைனின் 5வது படைப்பிரிவுக்குச் சொந்தமான கடல்சார் ட்ரோன் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
அமெரிக்க மத்திய கட்டளையகம் விடுத்துள்ள அறிவிப்பில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவின் பேரில் இந்த “தற்காப்புத் தாக்குதல்கள்” நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் தெற்கு கடற்கரைப் பகுதியான பந்தர் அப்பாஸ் (Bandar Abbas), காஷெம் தீவு (Qeshm Island), சிரிக் (Sirik) மற்றும் ஜாஸ்க் (Jask) ஆகிய இடங்களில் உள்ள ஐ.ஆர்.ஜி.சி (IRGC) வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ரேடார் தளங்கள் மீது அமெரிக்காவின் பத்துக்கும் மேற்பட்ட போர் விமானங்கள் குண்டுகளை வீசியுள்ளன. குறித்த பகுதிகளில் பயங்கர வெடிச்சத்தங்கள் கேட்டுள்ளதை ஈரானிய ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
அமெரிக்காவின் பதில் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்த ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி தமது நாட்டின் மீதான எந்தவொரு தாக்குதலும் பதிலடி கொடுக்கப்படாமல் விடப்படாது” என எச்சரித்ததைத் தொடர்ந்து ஜோர்டான் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளன. இதன் மூலம் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றமான நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் எண்ணெய் தாங்கிகள் மற்றும் வர்த்தகக் கப்பல்கள் உட்பட அனைத்து வகையான கப்பல்களுக்கு ஹோர்முஸ் நீரிணையை மூடுவதற்கு ஈரானின் உச்ச கூட்டு இராணுவக் கட்டளையகம் உத்தரவிட்டுள்ளதாக ஈரானின் ‘மெஹ்ர்’ (Mehr) செய்திச் சேவை தெரிவித்துள்ளது. இருப்பினும் ஈரானின் இந்த அறிவிப்புக்கு மறுப்பு தெரிவித்த அமெரிக்க மத்திய கட்டளையகம் வர்த்தகக் கப்பல்கள் எவ்வித தடையுமின்றி ஹோர்முஸ் நீரிணையினூடாக உள்நோக்கியும் வெளிநோக்கியும் தங்களது பயணங்களை வழமை போல் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளது.
போக்குவரத்து வலையமைப்புகள் முதல் மின்சாரம் மற்றும் நீர் விநியோகத் தொழில்துறைகள் வரையிலான உள்கட்டமைப்புகளை இலக்கு வைப்பதாக அமெரிக்காவினால் விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் ஒரு நாட்டின் மனவலிமைக்கு முன்னால் அவர்களின் பலவீனத்தையே காட்டுகின்றனவே தவிர அது அவர்களின் பலத்தை நிரூபிக்கும் செயலல்ல என ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதேநேரம் தாம் ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் அதுவும் மிகக் கடுமையான தாக்குதலை நடத்துவோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையே அடுத்தடுத்து தீவிரமடைந்து வரும் இந்தத் தாக்குதல்கள் கடந்த ஏப்ரல் மாதம் இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு பெரும் சவாலாக அமைந்துள்ளன.
இந்த சமீபத்திய மோதலில் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு எண்ணெய் ஏற்றிச்செல்லும் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளதாக ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கப்பல் போக்குவரத்து வழித்தடம் மூடப்பட்டதைத் தொடர்ந்தும் கப்பல்கள் மீதான வெளிப்படையான தாக்குதல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்தும் எண்ணெய் விலையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்காவும் ஈரானும் ஆரம்பத்தில் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் நோக்கில் ஒரு போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன. அதன் பின்னர் இரு தரப்பினரும் முழு அளவிலான மோதல்களுக்குத் திரும்பவில்லை.
கடந்த காலத்தில் மத்தியகிழக்கில் நிலவிய பதற்றநிலை காரணமாக எரிபொருட்களின் விலை புதிய உச்சத்தைத் தொட்டு வெறுமனே இரு நாடுகளுக்கான போர் பதற்றம் முழு உலக நாடுகளை ஸ்தம்பிக்க வைத்தன. எரிபொருட்களின் விலை உயர்வினைத் தொடர்ந்து அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு பொருட்களுக்கான தட்டுப்பாடு என வரிசை யுகம் உருவானது.
கடந்த ஏப்ரல் மாதம் இரு நாடுகளுக்குமிடையில் ஏற்படுத்தப்பட்ட தற்காலிக போர் நிறுத்தத்துடன் உலக அளவில் பொருளாதார பதற்றம் ஓரளவு குறைந்து வந்தது. அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு குறைவடைந்தது. தற்போது மீண்டும் உருவாகியுள்ள மத்திய கிழக்கு பதற்றம் மீண்டுமொரு பொருளாதார பதற்றத்திற்கு அத்திவாரமிடும் சந்தர்ப்பமாக மாறுகின்றது.
இந்த போர்பதற்ற நிலை காரணமாக உலக அளவில் எரிபொருள் கொள்வனவுகள் அதிகரித்து வருவதனால் தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக குறைவடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதொன்றாகும். உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று ஒரு பீப்பாய்க்கு 2 டொலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. பிரண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை 2.30 டொலரால் அதிகரித்து ஒரு பீப்பாய் 95.40 டொலராகப் பதிவாகியுள்ளது.

