Tuesday, May 19, 2026 3:35 pm
ஐபிஎல் கிரிகெட் களம் தற்போது சூடுபிடித்துள்ளது. இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் ஐபிஎல் தொடரின் ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப்பாக அமைந்துள்ளதுடன் எதிர்பாராத வெற்றிகளும் ஏமாற்றமான தருணங்களையும் பதிவுசெய்துகொண்டு இருக்கின்றன.
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 63 ஆவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதின. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுப்பை தீர்மானித்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 180 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் டெவால்ட் பிரேவிஸ் 44 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சார்பில் பெட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
181 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 19 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்தது. துடுப்பாட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சார்பில் இஷன் கிஷன் 70 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார். இஷான் கிஷன் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
நேற்று நடைபெற்ற போட்டியில் தோல்வியடைந்ததை தொடர்ந்து சென்னை சுப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. அதேநேரம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பிளேய் ஒவ்ப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது.
சென்னை அணி 12 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றியும் 6 தோல்வியுடனும் 12 புள்ளிகள் என்ற நிலையில் நேற்று களம் இறங்கியிருந்தது. எஞ்சிய 2 ஆட்டங்களில் வெற்றி பெறுவதுடன் மற்ற ஆட்டங்களின் முடிவும் சாதகமாக அமைந்தால் தான் அடுத்த சுற்றுக்குள் நுழைய முடியும் என்ற நிலையில் சென்னை போட்டியை எதிர்கொண்டிருந்தது.
ஐதராபாத் அணி 12 ஆட்டங்களில் விளையாடி 7 இல் வெற்றி 5 இல் தோல்வியுடன் 14 புள்ளிகள் என்ற நிலையில் நேற்று போட்டியில் இறங்கியது. ஐதராபாத் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் அல்லது ஐதராபாத்துக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 10 ஓட்டங்களால் தோல்வி கண்ட சென்னை அதற்கு பதிலடி கொடுக்கும் என்ற இரு யூகங்களுடன் நேற்றைய ஆட்டம் ஆரம்பமானது.
எம்.எஸ்.தோனி நேற்றைய போட்டியில் விளையாடுவாரா என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்த நிலையில் அவர் களமிறங்கவில்லை. இன்னும் ஒரே ஒரு போட்டி மட்டுமே மீதமுள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தகுதிச் சுற்றுக்கு வாய்ப்பு ஊசலாட்டத்தில் உள்ளது.
நேற்று நடைபெற்ற போட்டியின் முடிவால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியதுடன் குஜராத் டைட்டன்ஸ் அணியும் பிளே ஆஃப் சுற்று தகுதியை பெற்றுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்தப் போட்டியில் தொடக்கம் நன்றாக அமைந்தது. ஆட்டத்தின் முதல் பந்தையே நோ பாலாக வீசினார் நித்திஷ் குமார் ரெட்டி. அதனால் கிடைத்த ‘ஃப்ரீ ஹிட்’ வாய்ப்பில் சிக்ஸர் அடித்தார் சஞ்சு சாம்சன்.
மூன்றாவது ஓவரை வீச வந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் சஞ்சு சாம்சனை வெளியேற்றினார். 13 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து வெளியேறினார் சாம்சன். 4வது ஓவரை வீசிய இஷான் மலிங்கா 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 5வது ஓவரை வீசிய சகிப் ஹுசைன் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து உர்வில் விக்கெட்டை வீழ்த்தினார். 6வது ஓவரில் மலிங்கா 5 ரன்கள் மட்டும் கொடுக்க பவர்பிளே முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.
டைம் அவுட் முடிந்து வந்த முதல் ஓவரிலேயே கார்த்திக் ஷர்மா விக்கெட்டை வீழ்த்தினார் பேட் கம்மின்ஸ். 19 பந்துகள் சந்தித்த கார்த்திக் ஷர்மா 32 ரன்கள் எடுத்தார். 12வது ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட் விக்கெட்டையும் கைப்பற்றினார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ். சன்ரைசர்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக கம்மின்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் அபிஷேக் ஷர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் இருவருக்கும் சூப்பர் கிங்ஸ் வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசி நெருக்கடி ஏற்படுத்தினார்கள். அபிஷேக் ஷர்மா அவுட்டானபோது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஸ்கோர் 7.4 ஓவர்களில் 56/2. இது சன்ரைசர்ஸ் அணிக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
நெருக்கடியான நிலையில் இருந்த சன்ரைசர்ஸ் அணிக்கு ஹென்ரிக் கிளாசன் – இஷான் கிஷன் கூட்டணி உயிர்ப்பூட்டியது. நூர் அஹமது வீசிய 9வது ஓவரில் 1 பவுண்டரி அடித்து தன் அதிரடியைத் தொடங்கினார் கிளாசன். அகீல் ஹொசைன் வீசிய 10வது ஓவரிலும் நூர் அஹமது வீசிய 11வது ஓவரிலும் தலா 1 பவுண்டரியும் சிக்ஸரும் விளாசினார். 37 பந்துகளில் அரைசதம் அடித்த இஷன் 47 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து 19வது ஓவரில் ஆட்டமிழந்தார்.
கடைசி கட்டத்தில் சலில் அரோரா மற்றும் ரவிச்சந்திரன் ஸ்மரன் போட்டியை முடித்துக் கொடுக்க 19வது ஓவரின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

