Tuesday, May 19, 2026 3:36 pm
யுத்தக் காலத்தின் போது, சர்வதேச நாடுகள் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு யுத்தத்தை நிறுத்துமாறு கடும் அழுத்தங்களை பிரயோகித்த போதிலும், அவர் அதற்கு பணியாது உறுதியாக நின்று யுத்த வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார். எனவே, இந்த யுத்த வெற்றியின் முழுப் பொறுப்பும் கௌரவமும் முதன்மையாக அரசியல் தலைமைத்துவத்தை வழங்கிய மஹிந்த ராஜபக்ஷவிற்கே சார வேண்டும் என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைப் குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கையில் இதுவரை ஆட்சியில் இருந்த எந்தவொரு அரசாங்கமும் இந்தளவிற்கு நன்றிகெட்ட மற்றும் தமிழ் புலம்பெயர் அமைப்புகளுக்கு அஞ்சுகின்ற ஒரு நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததில்லை.
நேற்று முல்லைத்தீவு சம்பத்நுவர பகுதியில் எமது மாவீரர் (ரணவிரு) உபகார விழா ஒன்று நடைபெற்றது. அதில் நானும் கலந்துகொண்டேன். அந்த நிகழ்வில் ஓய்வுபெற்ற பல இராணுவ வீரர்கள் பதக்கங்களை அணிந்துகொண்டும், உயிரிழந்த வீரர்களின் உறவினர்கள், மனைவிகள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர். ஆனால், எமது இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்விற்கு எந்தவொரு இராணுவ அதிகாரியும் கலந்துகொள்வதற்கு இந்த அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை. எந்தவொரு அரச அதிகாரியும் வருவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அதேபோல், பிராந்திய ஊடகவியலாளர்கள் உள்நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டது. நமக்குக் கிடைத்த வரவேற்பு இதுதான்.
இருப்பினும், இந்தச் சூழ்நிலையிலும் எவ்வித அச்சமுமின்றி இந்த நிகழ்வில் கலந்துகொண்ட வெலிஓயா தமிழ் பிரதேச செயலாளருக்கு எனது நன்றிகளையும் மரியாதையையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
யுத்தத்தை வென்ற எமது இராணுவ வீரர்களை கௌரவிப்பதற்காக முல்லைத்தீவில் நடத்தப்பட்ட எமது நிகழ்விற்கு இவ்வாறான தடைகளை விதித்த இந்த அரசாங்கம், முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடி பயங்கரவாதிகளை நினைவுகூருவதற்கு எவ்வித இடையூறும் செய்யவில்லை. எமது கூட்டத்தைக் கண்காணிப்பதற்கு மாத்திரம் உளவுத்துறை அதிகாரிகள் நிறுத்தப்பட்டிருந்தனர்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஒன்று தெரிந்துகொள்ள வேண்டும், இது தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய பிரச்சினை. இதனை ஒரு வேடிக்கையாகக் கருத முடியாது. பிரபாகரனையோ, தற்கொலைத் குண்டுதாரிகளையோ அல்லது எல்.டி.டி.ஈ (LTTE) அமைப்பையோ மகிமைப்படுத்துவதன் மூலம், மற்றுமொரு பிரபாகரன் உருவாவதைத் தடுக்க முடியாது. இதன் காரணமாக மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கி, ஒரு யுத்தம் ஏற்பட்டால் அதன் முழுப் பொறுப்பையும் அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட இந்த நன்றிகெட்ட அரசாங்கமே ஏற்க வேண்டும்.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நாள் முதலே தமிழ் பிரிவினைவாத புலம்பெயர் அமைப்புகளை திருப்திப்படுத்தும் வேலைகளையே செய்து வருகிறது. தற்போதைய ஜனாதிபதி ஒருபோதும் இராணுவ வீரர்களை ‘ரணவிருவோ’ (மாவீரர்கள்) என விளிப்பதில்லை. அது புலம்பெயர் அமைப்புகளை குஷிப்படுத்துவதற்காகவே ஆகும். அதேபோல், சுதந்திர தின அணிவகுப்பில் யுத்த வெற்றிக்காகப் பயன்படுத்தப்பட்ட இராணுவ தளவாடங்கள் காட்சிப்படுத்தப்படவில்லை. அதுவும் அவர்களை திருப்திப்படுத்தவே.
தமிழ் மக்கள் மீது இவ்வளவு அக்கறை காட்டும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் நான் கேட்கிறேன் , அன்று 2 லட்சத்து 95 ஆயிரம் மக்களை நாம் மீள்குடியேற்றம் செய்தபோது, அங்குள்ள ஒரு குழந்தைக்கு யோகட் கப் ஒன்றையாவது கொடுக்க இவர்களில் யாராவது வந்தார்களா? 4 லட்சத்து 95 ஆயிரம் கண்ணிவெடிகளை எமது வீரர்கள் அகற்றிய போது, அவர்களுக்கு ஒரு தேநீராவது கொடுக்க இந்த தமிழ் அரசியல்வாதிகள் வந்தார்களா? எமது பணத்தில் தமிழ் மக்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுத்தபோது, ஒரு ஓட்டையாவது கொடுக்க இவர்கள் வரவில்லை. எனவே, தமிழ் மக்களின் உரிமைகள் குறித்தோ, நலன்கள் குறித்தோ பேச இவர்களுக்கு எந்தவொரு தார்மீக உரிமையும் இல்லை. இன்றும்கூட வடக்கில் மக்களுக்கு இரத்தம் தேவைப்படும் போது இராணுவத்தினரே இரத்தம் வழங்குகின்றனர்.
இவ்வாறான மிக ஆபத்தான, கீழ்த்தரமான குணங்களைக் கொண்ட அரசியல்வாதிகளே மக்களைத் தூண்டிவிட்டு பயங்கரவாதிகளை நினைவுகூற முற்படுகின்றனர். இதற்கு இந்த அரசாங்கம் இடமளிப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இதன் மூலம் மீண்டும் ஒரு பயங்கரவாதமும், தீவிரவாதமும் உருவாகி நாடு சீரழிந்து போகும். அதன் முழுப் பொறுப்பையும் அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான இந்த அரசாங்கமே ஏற்க வேண்டும்’ என்றார்.

