Friday, June 5, 2026 11:54 am
அமெரிக்க கடலோர பாதுகாப்பு திணைக்களத்தினால் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல் ‘சமுத்ரவிஜய’ என்ற பெயரில் உத்தியோகபூர்வமாக பணியில் இணைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க கடலோர பாதுகாப்பு திணைக்களத்தினால் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல் ‘சமுத்ரவிஜய’ என்ற பெயரில் உத்தியோகபூர்வமாக பணியில் இணைக்கும் நிகழ்வு முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய வளாகத்தில் நடைபெற்றது.
அமெரிக்க கடலோர பாதுகாப்பு திணைக்களத்தினால் 2025 டிசம்பர் 02 ஆம் திகதி இந்தக் கப்பல் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. இலங்கை கடற்படையின் செயல்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப நவீனமயமாக்கப்பட்டதன் பின்னர் 2026 பெப்ரவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் பால்டிமோரில் உள்ள அமெரிக்க கடலோர பாதுகாப்பு கப்பல் தளத்திலிருந்து கொழும்பு நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்தது.
கடல்சார் கண்காணிப்பு நடவடிக்கைகள், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள், கடல் வளப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் சர்வதேச கடல்சார் சட்டங்கள் மற்றும் உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இக்கப்பல் முக்கிய பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கப்பலின் பெயர் பலகை மற்றும் உத்தியோகபூர்வ இலச்சினையை திரைநீக்கம் செய்த ஜனாதிபதி கப்பலில் கண்காணிப்பு விஜயம் ஒன்றையும் மேற்கொண்டார்.

