Thursday, May 7, 2026 1:44 pm
வெலிகம படவல பகுதியைச் சேர்ந்த ஏழு வயதுடைய சிறுவன் கைக்கடிகாரங்களில் பயன்படுத்தப்பட்டு வீசப்பட்ட சிறிய பற்றரியை தவறுதலாக விழுங்கி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி சந்திரசேன லோக்குக முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில் சிறுவனின் தந்தை,
எனது இளைய மகன் விளையாடிக்கொண்டிருந்தபோது கைக்கடிகார பட்டன் பற்றரியை எடுத்து விழுங்கிவிட்டான். உடனடியாக வைத்தியரிடம் அழைத்துச் சென்றோம். எக்ஸ்ரே பரிசோதனைக்குப் பின்னர், மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காகக் காலி கராபிட்டிய தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் எனத் தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையில் சிறுவனின் வயிற்றில் இருந்த பற்றரி அகற்றப்பட்டு இரண்டு நாட்கள் சிகிச்சைக்குப் பின் சிறுவன் வீடு திரும்பியுள்ளார். எனினும், ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி பாடசாலைக்குச் செல்லத் தயாராக இருந்தபோது, சிறுவனுக்குக் கடுமையான வயிற்று வலி மற்றும் தலைவலி ஏற்பட்டுள்ளது. ஆனாலும், சிறுவன் பாடசாலைக்கு அனுப்பப்பட்டிருந்தான்.
அன்றைய தினம் காலை 8.30 மணியளவில் சிறுவன் பாடசாலையில் இரத்த வாந்தி எடுப்பதாகத் தந்தைக்குத் தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு எண்டோஸ்கோபி சோதனை மேற்கொள்ளப்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவன், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.
குடல் பகுதியில் உள்ள முக்கிய நரம்பு சேதமடைந்து, அதனால் ஏற்பட்ட உட்புற இரத்தப்போக்கினால் மரணம் நிகழ்ந்துள்ளது என சிறுவனின் பிரேத பரிசோதனையை நடத்திய கராபிட்டிய வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரி யு.டி.ஏ. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

