Sunday, June 21, 2026 5:00 pm
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் அருகே உள்ள தளவாரம்பூண்டி தொடக்கப் பாடசாலையில் தவெக-வின் ஒன்றிய செயலாளராக இருந்த ராஜேஷ், அத்துமீறி நுழைந்து, மாணவர்களிடையே கட்சியின் தலைவர் விஜய்யின் புகைப்படத்தை காட்டி அரசியல் பேசியுள்ளார்.
“இவர்தான் உங்களுக்கு மாமா, எங்களுக்கு அண்ணன், இவர்தான் முதல்வர்” என மாணவர்களிடம் பேசியதோடு, வகுப்பறையில் முதலமைச்சரின் படம் ஏன் இல்லை என கேள்வி எழுப்பி, அங்கு விஜய்யின் படத்தை மாட்ட வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளார். இச்செயலை அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் ரீல்ஸாக பதிவிட்டனர். கல்வி கற்கும் இடத்தில் அரசியல் புகுத்தப்பட்டதையும், ஆசிரியர்கள் இதனை வேடிக்கை பார்த்ததையும் கண்டு பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
இச்சம்பவம் கட்சி தலைமையின் கவனத்திற்கு சென்றதும், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி, ராஜேஷை அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கி தவெக தலைமை அதிரடி உத்தரவிட்டது. மேலும், கட்சியினர் யாரும் அவருடன் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் கண்டிப்புடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி நிறுவனங்களில் அரசியல் புகுத்தப்படுவது மாணவர்களின் கல்வி சூழலை பாதிக்கும் என்பதால், இதுபோன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

