Monday, May 4, 2026 12:17 pm
நல்லத்தண்ணி பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி இன்று திங்கட்கிழமை (04) திடீரென தீப்பிடித்ததாக ஹட்டன் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஹட்டன் – மஸ்கெலியா பிரதான வீதியில் டிக்கோய தோட்டப் பகுதியில் காலை சுமார் 10:15 மணியளவில் விபத்து நிகழ்ந்துள்ளது.
பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியின், எரிபொருள் கசிவு காரணமாக இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறில் தீப்பற்றி எரிந்துள்ளது. இதில் பயணித்துக் கொண்டிருந்த பயணியும் சாரதியும் அதிஷ்டவசமாக காப்பாற்றப்பட்டுள்ளனர்.
தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், முச்சக்கர வண்டியின் இயந்திர பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளது. முச்சக்கர வண்டி தீப்பிடித்தபோது சாரதி மற்றும் மற்றொரு பயணி மட்டுமே அதில் பயணித்ததாக ஹட்டன் பொலிஸ் தெரிவித்துள்ளனர்.

