Wednesday, June 3, 2026 1:48 pm
தொழில்நுட்பத்தின் அபரிதமான வளர்ச்சி இன்று எங்கும் பரவி காணப்படுகின்றது. தொழில்நுட்பத்தின் உதவியுடன் மனிதன் கனவிலும் நினைத்துப் பார்க்காத விடயங்களை நிஜத்தில் நிகழ்த்திக் காட்டுகின்றான்.
தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சமாக செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பம் காணப்படுகின்றது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை மடிக்கணினிகள் மற்றும் கணினிகளில் நேரடியாகச் செயற்படுத்தக்கூடிய புதிய சிப் ஒன்றை என்விடியா (Nvidia) நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
இதனை “On-Device AI” அல்லது “Edge AI” என்று அழைப்பார்கள். இணைய இணைப்பு அல்லது கிளவுட் சேவைகளின் உதவியின்றி கணினியின் வன்பொருள் திறனை மட்டுமே கொண்டு AI மென்பொருட்களை இயக்க இந்த சிப்கள் வழிவகுக்கின்றன.
தைவானில் நடைபெற்ற ‘Computex’ மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய என்விடியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து மூன்று வருட கூட்டு முயற்சியில் இந்த ‘RTX Spark’ சிப் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய சிப் முறை தொழில்நுட்ப உலகில் பாரியதொரு முன்னேற்றமாகப் பார்க்கப்படுகின்றது. இந்த முயற்சி AI யுகத்திற்கான கணினிகளை மறுவடிவமைப்பு செய்யும் நோக்கம் கொண்டது.
தைவானின் ‘MediaTek’ நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டம் கிளவுட் கம்ப்யூட்டிங்கை (Cloud Computing) மட்டும் நம்பியிருக்காமல் கணினியிலேயே நேரடியாக சுயமாக இயங்கும் AI முகவர்களை இயக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிப் பொருத்தப்பட்ட மடிக்கணினிகள் மற்றும் கணினிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் Dell, HP, Lenovo, ASUS, மைக்ரோசாப்ட் சர்பேஸ் மற்றும் எம்எஸ்ஐ (MSI) ஆகிய நிறுவனங்கள் ஊடாக சந்தைக்கு வரவுள்ளன.
AI தொழில்நுட்பத்தால் மென்பொருள் பொறியியலாளர்களின் வேலைவாய்ப்புகள் குறையும் என்ற ஒரு அச்சம் நிலவுவதாக கூறப்பட்ட கருத்தை நிராகரித்த ஜென்சன் ஹுவாங் அது முற்றிலும் முட்டாள்தனமானது என்றும் AI தொழில்நுட்பம் பணியாளர்களின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதால் மேலும் பல மென்பொருள் பொறியியலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து என்விடியா நிறுவனத்தின் பங்குகள் 4% வரை உயர்ந்ததுடன் அந்த நிறுவனத்திற்கு போட்டியான ஏஎம்டி (AMD), இன்டெல் (Intel) மற்றும் குவால்காம் (Qualcomm) ஆகிய நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியடைந்துள்ளன.
AI தொழில்நுட்பமானது வெறுமனே கேள்விகளுக்குப் பதிலளிக்கும் ஒரு கருவியாக இல்லாமல் முழுமையாக சுயமாக இயங்கும் முகவர்களாக மாறும் ஒரு திருப்புமுனையாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
NVIDIA சிப் மூலம் இயங்கும் முதல் Windows PC அறிமுகமாக உள்ளது. இதுவரை Windows லேப்டாப்களுக்கு Intel, AMD, Qualcomm போன்ற நிறுவனங்கள் CPU-களை வழங்கி வந்தன. இப்போது NVIDIA தனது சிப் மூலம் Windows இயங்குதளத்தை இயக்கும் புதிய முயற்சியை மேற்கொள்கிறது. இந்த கணினிகள் தைவானில் நடைபெறும் Computex கண்காட்சி மற்றும் San பிரான்சிஸ்கோவில் நடைபெறும் Microsoft Build Developer Conference-இல் அறிமுகமாகும்.
NVIDIA, Arm தொழில்நுட்பத்தை பயன்படுத்தி CPU-களை வடிவமைக்கிறது. Apple தனது சொந்த M5 சிப் கொண்ட MacBook-களை மார்ச் மாதத்தில் வெளியிட்டது. அதேபோல் Microsoft, NVIDIA இணைந்து AI-க்கு உகந்த அதிக பேட்டரி ஆயுட்காலம் கொண்ட Windows PC-களை உருவாக்க முயற்சிக்கிறது. இந்த புதிய PC-கள், AI ஏஜென்ட்கள் நேரடியாக Windows கணினிகளில் செயல்பட உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி உலகில் புதிய யுகம் தொடங்குகிறது. இந்த நடவடிக்கை கணினி சந்தையில் ஆப்பிள் மற்றும் இன்டெல் போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களுக்கு ஒரு சவாலாக அமையும்.
விண்டோஸ் மூலம் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒவ்வொரு மேசைக்கும் அளவிடப்படாத நுண்ணறிவை வழங்குவதே எங்கள் இலக்கு என மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவரும் தலைமை அதிகாரியுமான சத்யா நாதெல்லா கூறினார். செயற்கை நுண்ணறிவுக்கு ஆற்றலளிக்கும் தரவு மையங்களின் வளர்ச்சி என்விடியாவை உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக மாற்ற உதவியுள்ளது.
இந்த புதிய சிப்கள் மூலம் முக்கிய பின்வரும் நன்மைகள் பயனர்களுக்குக் கிடைக்கும்.
தரவுகள் இணையத்திற்குச் சென்று வரத் தேவை ஏற்படாததனால் தாமதமின்றி வேலைகள் உடனுக்குடன் நடக்கும் என்பதனால் அதிவேகச் செயல்பாடு நிகழும்.
இணைய இணைப்பு (Wi-Fi / Internet) இல்லாத இடங்களிலும் AI அம்சங்களை தடையின்றிப் பயன்படுத்தலாம்.
வீடியோ எடிட்டிங், 3D டிசைனிங் மற்றும் கேமிங் போன்றவற்றில் AI தொழில்நுட்பம் காட்சிகளை மிகத் துல்லியமாக மாற்ற உதவும்.
உள்ளடக்க உருவாக்குநர்கள் (Content Creators) மிக வேகமாகக் காட்சிகளை உருவாக்க (Render) முடியும்.
இவ்வாறாக வெளியாகவுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை மடிக்கணினிகள் மற்றும் கணினிகளில் நேரடியாகச் செயற்படுத்தக்கூடிய புதிய சிப் தொழில்நுட்ப உலகில் பாரிய புரட்சியை உருவாக்கும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.

