Thursday, November 26, 2026 6:27 pm
கோவை பெரியார் அறிவுலக நூலகத்திற்கு தரமற்ற போலி நூல்களை விற்பனை செய்து பல கோடி ரூபாய் நிதி முறைகேட்டில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அகல் விளக்கு , ஃபீனிக்ஸ் ஆஅகிய பதிப்பகங்களின் உரிமையாளர் ஆர். மோகன் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் இலஞ்ச ஒழிப்பு , ஊழல் தடுப்புத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட தரமற்ற புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து, நூலகங்களில் இருந்து சுமார் 70,000-க்கும் மேற்பட்ட போலி புத்தகங்கள் அகற்றப்பட்டதோடு, நூலகத்துறை அலுவலர்கள் 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், தொடர்புடைய அதிகாரிகள் மீது 11 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கடந்த நவம்பர் 16-ஆம் திகதி மோகன் கைது செய்யப்பட்டார்.
இன்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி முன்பு மோகன் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு, மோகனை பொலிஸ் காவலுக்கு அனுமதிக்கக்கோரி இலஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்று 3 நாள் பொலிஸ் காவலுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணை நவம்பர் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

