Wednesday, November 25, 2026 9:25 pm
சீன விண்வெளி வீரர்களான டாங் ஹாங்போ ,வு யி , பாகிஸ்தான் விண்வெளி வீரர் முகமது ஜீஷான் அலி ஆகியோர் அடங்கிய ‘ஷென்சோ-24’ குழுவினர், இன்று புதன்கிழமை [25] சீனாவின் ‘தியாங்கோங்’ விண்வெளி நிலையத்திற்குள் நுழைந்தனர்.
‘பேலோட் ஸ்பெஷலிஸ்ட்’ (payload specialist – விண்வெளி ஆய்வு உபகரண நிபுணர்) பொறுப்பில் உள்ள அலி, ‘தியாங்கோங்’ விண்வெளி நிலையத்திற்குள் நுழைந்த முதல் வெளிநாட்டவர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
இந்த மூன்று விண்வெளி வீரர்களும், அதே நாளில் காலை 8:18 மணிக்கு (பெய்ஜிங் நேரம்) சீனாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து ‘ஷென்சோ-24’ விண்கலம் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டனர்.
சீன மனித விண்வெளி ஆய்வு முகமையின் (CMSA) தகவல்படி, ஏற்கனவே விண்வெளியில் இருந்த ‘ஷென்சோ-23’ குழுவினர், பிற்பகல் 2:35 மணிக்கு விண்வெளி நிலையத்தின் கதவைத் திறந்து, புதிதாக வந்தவர்களை வரவேற்றனர்.
விண்வெளி நிலையத்திற்குள் நுழைந்த ‘ஷென்சோ-24’ குழுவினர், சுமார் ஆறு மாதங்களாக விண்வெளியில் இருந்த ‘ஷென்சோ-23’ குழுவின் மூன்று வீரர்களைச் சந்தித்தனர். சீனாவின் விண்வெளி வரலாற்றில் ஒன்பதாவது முறையாக நிகழ்ந்த இந்தச் சந்திப்பின்போது, இரு குழுவினரும் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். தற்போது, விண்வெளியில் பொறுப்புகளை ஒப்படைக்கும் புதிய கட்டத்தைத் தொடங்க உள்ளனர்.

