Wednesday, November 18, 2026 10:32 pm
நாஸா' எனப்படும் அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பால் அனுப்பப்பட்டு, 50 ஆண்டுகளாக விண்வெளியில் பயணம் செய்துவரும், வாயேஜர் – 1′ செயற்கைக்கோள், நேற்று, பூமியிலிருந்து ஒரு ஒளிநாள் தொலைவைக் கடந்து, புதிய சகாப்தத்தை படைத்துள்ளது.
- கடந்த 1977, செப்., 5ம் திகதி வாயேஜர் – 1 விண்ணில் ஏவப்பட்டது. இதன் இரட்டை செயற்கைக்கோளான, வாயேஜர் – 2, அந்த ஆண்டு ஓகஸ்ட் 20ம் திகதி ஏவப்பட்ட போதிலும், சில மாதங்களிலேயே வாயேஜர் – 1 அதனை முந்திச் சென்றது
- சூரிய குடும்பத்தின் வெளிப்புற கோள்களான வியாழன், சனி ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக இவை அனுப்பப்பட்டன. இந்த பயணத்தின்போது, வியாழன் , சனி ஆகியவற்றின் புதிய துணைக்கோள்கள், அவற்றின் வளையங்கள் குறித்த பல புதிய தகவல்களை பூமிக்கு அனுப்பின.
- சூரியனின் பாதுகாப்பு வளையத்தைக் கடந்து, 2012ல் வாயேஜர் – 1 செயற்கைக்கோள், விண்மீன்களுக்கு இடையேயான பகுதிக்குள் நுழைந்தது. வாயேஜர் – 2, இந்த எல்லையை, 2018ல் அடைந்தது. ஒளியின் வேகம் ஒரு விநாடிக்கு, 3 லட்சம் கி.மீ., ஆகும். அதன்படி, 24 மணி நேரத்தில், 2,596 கோடி கி.மீ., கடப்பதே, ஒரு ஒளி நாள் என்றழைக்கப்படுகிறது.
- பூமியிலிருந்து 2,600 கோடி கி.மீ. துாரம் பயணித்து, ஒரு முழு ஒளி நாளை வாயேஜர் – 1, நேற்று எட்டியுள்ளது. இந்த செயற்கைக்கோள், மணிக்கு 61,000 கி.மீ., வேகத்தில் விண்வெளியில் பறந்து கொண்டிருக்கிறது.
- வாயேஜர் – 1 அடைந்துள்ள இந்தத் தொலைவை, அதன் இரட்டை செயற்கைக்கோளான, வாயேஜர் – 2 அடைய இன்னும் ஒன்பது ஆண்டுகள் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது.
- இந்த செயற்கைக்கோளை, வேற்றுகிரகவாசிகள் அல்லது எதிர்கால அறிவார்ந்த உயிரினங்கள் ஒருவேளை கண்டெடுத்தால், பூமியை பற்றி அறிந்துகொள்ளும் வகையில் அதில், ‘கோல்டன் ரெக்கார்டு’ எனப்படும் தங்கத் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதில், 55 மொழிகளில் வாழ்த்துகள், இசை, ஒலிகள் , பூமியின் நாகரிகம் குறித்த படங்கள் இடம்பெற்றுள்ளன.

