Wednesday, November 18, 2026 12:10 pm
ஈரான் புரட்சிகர காவல் படையின் தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா கொன்றதற்குப் பழிவாங்கும் விதமாக, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைக் கொல்லச் சதி செய்த பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு 27 ஆண்டுகளுக்கும் மேலான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.
ஈரானுடன் தொடர்பு கொண்டிருந்ததாகக் கூறப்படும் ஆசிஃப் மெர்ச்சன்ட், அமெரிக்காவில் உள்ள ஒரு அரசியல்வாதியையோ அல்லது அரசு அதிகாரியையோ படுகொலை செய்ய ஒரு கூலிப்படையினரை அமர்த்த முயன்றதை புரூக்ளின் நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.
ஈரானின் வெளிநாட்டு இராணுவ நடவடிக்கைகளின் தலைவரான சுலைமானி, ஜனவரி 2020-ல் பாக்தாத்தில் நடந்த அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரது கொலைக்குப் பழிவாங்குவதாக ஈரானிய அதிகாரிகள் பலமுறை சூளுரைத்துள்ளனர்.
ஈரானியத் தலைநகர் தெஹ்ரானில் உள்ள தனது குடும்பத்தைப் பாதுகாப்புப் படையினரிடமிருந்து பாதுகாக்க, இந்தச் சதித்திட்டத்தில் ஈடுபடத் தான் நிர்பந்திக்கப்பட்டதாக மெர்ச்சன்ட் சாட்சியமளித்ததாகப் பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒரு குறிப்பிட்ட நபரைக் கொல்லுமாறு தனக்கு ஒருபோதும் உத்தரவிடப்படவில்லை என்று அவர் கூறினார், ஆனால் தனது ஈரானியத் தொடர்பாளர் இந்தச் சதித்திட்டம் தொடர்பாக ஜனாதிபதி ட்ரம்ப், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ,முன்னாள் ஐ.நா. தூதர் நிக்கி ஹேலி ஆகிய மூவரையும் குறிப்பிட்டதாகக் கூறினார்.
ஆனால், இந்தச் சதித்திட்டம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்ட்ரம்புக்கு எதிரானது என்று அமெரிக்காவின் உயர்மட்ட சட்ட அதிகாரி டாட் பிளான்ச் செவ்வாயன்று தெரிவித்தார்.

